ஊட்டசத்து பாதுகாப்பு கருத்தரங்கு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் காய்கறிகளில் மாறிவரும் கால நிலைக்கேற்ப உணவுத் தன்னிறைவு அடைவு பற்றிய தேசிய கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியை என் கே.கிருஷ்ணகுமார், தலைவர், பன்னாட்டு பையோவர்சிடி அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

காய்கறி உற்பத்தியானது மாறிவரும் பருவ நிலையினால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அதனை பாதுகாக்கப்படி சூழ்நிலைகளில் வளர்ப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் எனவும் திருவனந்தபுரம் கிழக்கு வகை ஆராய்ச்சி நிலைய திட்ட இயக்குநர் முனைவர் ஜேம்ஸ் ஜார்ஜ் கூறினார்.

பூனாவில் உள்ள வெங்காயம் மற்றும் பூண்டு இயக்குநகரத்தின் தலைவர், முனைவர் மேஜர் சிங், அவர்கள் தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளில் காணப்படும் அதிக மற்றும் குறைந்த விளைச்சல், விலை வீழ்ச்சி மற்றும் ஏற்றம் ஆகியவற்றை நிலைப்படுத்துவதன் அவசியத்தை விளக்கி கூறினார்.

கோவையில் உள்ள ஸ்டேன்ஸ் கம்பெனி, இயக்குநர் லக்ஷ்மி நாராயணன் அவர்கள் அங்கக வேளாண்மையில் அவர்கள் உற்பத்தி பற்றி விளக்கிக் கூறினார்.

சென்னையை சேர்ந்த நபார்டு வங்கியின் தலைவர் மற்றும் முதன்மையர் நாகூர் அலி ஜின்னா முருங்கை மற்றும் கீரையின் மதிப்புக் கூட்டு ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதோடு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கே.இராமசாமி சிறிய வெங்காய விதை உற்பத்தியானது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறினார். மேலும் மாணவர்கள் விவசாயிகள் பங்களிப்பு மற்றும் படிக்கும் போதே மாணவர்கள் பணம் ஈட்டும் முறை போன்ற நிகழ்வுகள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம் தற்சமயம் சங்கரன் கோவில், பையூர் மற்றும் தேனீ ஆகிய இடங்களில் எலுமிச்சை, மா மற்றும்  திராட்சை ஆகியவற்றின் ஆராய்ச்சி நிலையங்களை தொடங்கியுள்ளது என்றும் கூறினார்.

புதுடில்லியில் உள்ள பன்னாட்டு பையோவெர்சிட்டியின் தலைவர் முனைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில் முதியவர்களுக்கான உணவுத்தேவையைப்பற்றிய ஆராய்ச்சியின் அவசியத்தை எடுத்துக் கூறியதோடு, பூச்சி நோய் எதிர்ப்பு மற்றும் வெள்ள எதிர்ப்பு உடைய காய்கறி இரகங்களை உருவாக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். வணீகரீதியாக அதிகம் சாகுபடி செய்யாத காய்கறிகளில் இனப்பெருக்க ஆராய்ச்சி செய்து அதனை மேம்படுத்துவதன் அவசியத்தை பற்றி விளக்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சிகளில் காய்கறிகள் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

வேளாண்மைப் பல்கலைக்கழக தோட்டக்கலை முதன்மையர் எம்.ஜவஹார்லால் வரவேற்புரை வழங்கினார். இறுதியாக விழாவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் த. ஆறுமுகம் நன்றி உரையாற்றினார்.