234 தொகுதிகளிலும் ரஜினிக்காக பிரச்சாரம் : இந்து மக்கள் கட்சி தலைவர் அறிவிப்பு

ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சிக்காக தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி கட்சி தொடங்குவது உறுதி என்று அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையிலும் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ராகவேந்திரா ஆலயத்தில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் இந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் செய்வதாகவும் அனைத்தையும் மாற்ற வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்துள்ளார். ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் பேச்சில் தியாகம் வீரம் மற்றும் விவேகம் வெளிப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் தொடங்க இருக்கும் கட்சிக்கு 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி அரசியல் பிரச்சாரம் மேற்கொள்ளும். அவர்களுடன் இணைந்து முழுமையாக பணியாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.