4 மாத குழந்தைக்கு மூளை அறுவைச் சிகிச்சை – கேஎம்சிஎச் மருத்துவர்களின் புதுமையான நுண்துளை அறுவை சிகிச்சை

குறைப்பிரசவத்தில் பிறந்த, பெரிய தலையும், நரம்பியல் தொடர்பான குறைபாடுகளும் கொண்ட குழந்தை,  நிபுணர்களது சிகிச்சைக்காக கேஎம்சிஎச் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது. இரட்டையரில் ஒன்றான அக்குழந்தை பிறக்கும்போது 800 கிராம் எடைதான் இருந்தது. அதிகரித்துக்கொண்டே இருந்த குழந்தையின் தலையின் அளவும், கீழ்நோக்கி உருண்டிருந்த கண்களும், இயல்புக்கு மாறாக அசைந்த கை கால்களும், பெற்றோருக்கு அச்சமூட்டின. எனவே, உடனே மருத்துவர்களை நாடினர்.

கேஎம்சிஎச் மருத்துவமனை சிசு மருத்துவர் சீனிவாசன், பாலகிருஷ்ணன், நரம்பியல் நிபுணர் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழு குழந்தையைப் பரிசோதித்தது. எம்.ஆர்.ஐ. ஸ்கேனும் எடுக்கப்பட்டது. அதில், குழந்தைக்கு பிறவி மூளைநீர்ப் பெருக்கம் இருப்பது கண்டறியப்பட்டது(Hydrocephalous). இந்த நோயின் விளைவாக மூளை, தண்டுவடங்களில் நீர் வடிகால் அடைபட்டு அங்குள்ள நீர், பைகள் நிறைந்து பெருகிவிடும். இயற்கையான இந்த பைகளில்  ஏற்படும் அழுத்தம் மூளை நரம்பு திசுக்களை நசுக்கி நரம்புச் செயல்பாட்டில் குறைபாடுகளை உண்டாக்கி, குழந்தையை செயலிழக்கச் செய்து, இறுதியில் மரணத்தை ஏற்படுத்தும். எனவே, குழந்தையைக் காப்பாற்றுவதற்காக மற்றும் இந்த நிலைக்காக மருந்து அளிப்பதைவிட, உடனே தடைபட்ட நீரை வடியச் செய்வது அவசியம். குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டிருந்தது; இருப்பினும் அதன் எலெக்ட்ரொலைட் அளவு இயல்பாக இல்லை; இருப்பினும், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு இதனைத் திறமையாகக் கையாண்டது.

கேஎம்சிஎச்-சின் மூத்த நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணரும், நரம்பியல் அறுவைச் சிகிச்சைக்கான தேசிய கல்விக் கழகத்தின் திட்ட இயக்குநருமான பார்த்திபன், நுண்துளை எண்டோஸ்கோபிக் மூளை அறுவைச் சிகிச்சையின் மூலம் அடைபட்ட நீர் வடிய, நீர் பைகளை தவிர்த்து, வடிகால் பாதையை மாற்றியமைத்தார். இந்த உத்தி தனித்துவமானது; மூளையில் இயல்பான நீரோட்டத்தை ஏற்படுத்தி நீர் பைகளிலிருக்கும்  அழுத்தத்தையும் குறைக்கிறது. வழக்கமாக செய்யப்படும் நீண்ட ஸிலிகான் குழாயின் மூலம் மூளையிலிருந்து நீர் வயிற்றுப் பகுதிக்கு திருப்பபடுவது இந்தக் குழந்தைக்கு செய்யப்படவில்லை. இந்த சிகிச்சைக்குப் பின் குழந்தையின் நரம்பியக்கத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. அதன் கண்களின் நிலையும், கைகால்களின் அசைவும் கிட்டத்தட்ட இயல்புநிலைக்குத் திரும்பியது கண்டு அதன் பெற்றோர் மகிழ்ச்சியடைந்தனர்.

‘இந்த நுண்துளை சிகிச்சை ‘எண்டோஸ்கோபிக் தர்டு வெண்ட்ரிகலோஸ்டமி’ (ETV) என அழைக்கப்படுகிறது; இது  வழக்கமாக செய்யப்படும் ஒரு எண்டோஸ்கோபிக் முறைதான்” என்றார் பார்த்திபன். மேலும் அவர், “இந்த முறை சவாலான ஒன்று; ஆனால், நோயாளிகளுக்கு, குறிப்பாக குறைமாத, எடை குறைந்த, கொரோனா தொற்றால் பலவீனமாகிவிட்ட குழந்தைக்கு நல்லது. இந்த சிகிச்சை முறையை பிறந்த சிசுக்களுக்கும், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் எளிதாகச் செய்யலாம். நான்கு மாதத்திற்குட்பட்ட குறைப்பிரசவக் குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சையளிப்பது சவாலானது; இதை ஒரு சிறந்த குழுவினால்தான் செய்ய முடியும். செய்திருக்கிறோம்” என்றார்.

மருத்துவர்கள் சீனிவாசனும், பாலகிருஷ்ணனும் கூறுகையில் குறைவான எடையுடன் மற்றும் மூளை நீர் பெருக்கத்தில் இருக்கும் இந்த குழந்தையை அறுவை சிகிச்சைக்கு தயார் படுத்துவது மிகவும் சவாலானது, இதற்கு பிரித்தியேக தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவி தேவைப்படும். டாக்டர் பிரகாஷ், குழந்தைகளுக்கு மூளை  நீர்ப்பெருக்கம் ஏற்படுவது விரைவாக கண்டறியப்பட வேண்டும்; இந்த நிலையில் நரம்பியக்க ஆய்வு மிக முக்கியமானது. எவ்வளவு விரைவாக இது கண்டுபிடிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு உரிய சிகிச்சையும் சிறப்பானதாக அமையும்” என்றார். குழந்தையின் தலை வீக்கத்தைக் கண்டறிந்து சிகிச்சையை நாடிய பெற்றோரையும் அவர் பாராட்டினார். மயக்க நிலையை மேலாண்மை செய்த டாக்டர் ராஜேந்திரன், சிறு குழந்தைகளுக்கு மிகச் சிறிய குழாய்களையே பயன்படுத்த இயலும் என்பதால் அவற்றை உடம்பில் செருகுவது சவாலானது, மிகுந்த கவனம் தேவை என்றார்.

இந்த சிக்கலான பிறவிக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை செய்து முடித்த மருத்துவக் குழுவை கோவை மெடிக்கல் சென்டரின் நிர்வாக இயக்குநர் அருண் பழனிசாமி வெகுவாகப் பாராட்டினார். அவர், நரம்பியல் அறுவைச் சிகிச்சை, குழந்தைகள் சிகிச்சை ஆகியவற்றுக்கான அதிநவீனத் தொழில்நுட்ப வசதிகளை கேஎம்சிஎச் கொண்டுள்ளது. அதனால் இருபது ஆண்டுகளாக இம்மருத்துவமனை தலைநிமிர்ந்து நிற்கிறது. இனி கொங்கு பகுதியில் பழைய ஷண்ட் அறுவைச் சிகிச்சைக்கு பதிலாக எண்டொஸ்கோபிக் நுண்துளை அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.