கொங்குச்சீமை செங்காற்று – 14

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை…

– சூர்யகாந்தன்

 

சொன்ன வாக்கு மெய்யாப்போச்சு!

கண்ணத்தாளின் அக்காவும், தம்பியும் வந்திருந்தனர் அவர்களிடம் அவ்வளவாக முகம் கொடுத்து இவள் பேசவில்லை. தன் ஒருத்திக்கு மட்டுமே நிறைய வேலைகள் இருப்பதைப்போல் ரேஷன் கடைக்குப் போவதும் துணிமணிகளைத் துவைப்பதுமாக நடந்து கொண்டிருந்தாள் நாகரத்தினம்..!

“…என்னக்கா… ஓரம்பறைக வந்திருக்காங்க போலத் தெரிஞ்சது. ஊட்டுல என்னாச்சு விசேஷம் உண்டுங்களா? சுப்பையன் பொஞ்சாதி முழுகாம இருக்குதுன்னு வண்ணாத்தி சொன்னாளுங்க! தேவுலெத் தேவுலெ…! நல்லா இருக்குட்டும்ங்க…”

மளிகைக் கடைக்குப் போய்விட்டு வந்தவளிடம் எதிர்ப்பட்ட பாலுத்தொரையின் மனைவிதான் இப்படிக் கேட்டது.

“..ம் ..ம்! அதுக்கொன்னும் கொறச்சலில்லெ…”எனும்படி தனது சந்தோஷமின்மையை பார்வையிலேயே காட்டிவிட்டு விடுவிடுவென நடையை எட்டிப்போட்டாள்.

மனதில் மூண்ட சலனங்களின் பின்னல் வயிற்றை கலக்குவது போல் இவளை இம்சைப்படுத்தியது.

“…பாவம், வருசம் அஞ்சுக்கு மேலெ ஆகியும் உன்னமும் உனக்குத்தான் அந்தப் பாக்கியம் ஏனோ கெடக்காமயே நாளேத் தள்ளுதே…”

அனுதாபத்தோடு இவளிடம் சொல்பவர்களைக் கூட, “குத்திக்காட்டி நையாண்டி பண்ணுகிறார்களோ” வெனதப்பிதமாகவும் எண்ண வைத்தது.

டாக்டர்களைப் பார்த்து கணவன் மனைவி இருவருமே உடற்பரிசோதனையும் செய்து கொண்ட போதிலும், இன்னமும் பலன் கிடைக்கவில்லை.

“ச்செரி..! எப்பவோ ஆகுறப்ப ஆகுட்டும்“.

நமச்சிவாயத்தின் சரிக்கட்டலை இவள் ஏற்றுச் சமாதானம் ஆனா மாதிரி தெரியவில்லை.

அவனது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு மாதத்திற்கொரு தடவையாவது ஜோதிடர் மாற்றி ஜோதிடர் என அலைச்சல் பட்டுக் கொண்டிருப்பாள். “ இந்த ஊருல இன்ன கோயில்ல சாமி ஆடிச் சொல்லுதுங்க. சொன்னா சொல்றது அப்பிடியே நடக்குதுங்கிறாங்க.” என காற்றுவாக்கில் காதுக்கு எட்டினால் போதும். அந்த இடத்தைத் தேடித்போய் தனது எதிர்கால பலா பலன்களை அறிந்து கொண்டு வராவிட்டால் தூக்கம் வாரது.

“…தெக்கே அய்யாமலைல சாமிக்குப் பூசை செய்யிறப்ப பூசாரிக்கு அருள் வந்து நாட்டு வளப்பம் சொல்றதுண்டு அம்மணி! ‘கல்கோழி கூவுமாடா கண்ணு! கானல்லெ வௌக்கெரியும் கண்ணு! நா பாப்பாத்தி பெத்த பாலகண்டா! எனக்குக் காதுகுத்துச் சிரு இன்னமும் கூட இல்லையடா கண்ணு’ அப்பிடின்னு பாட்டாகப் பாடி சாமி சொல்லும்..! அதும்படி இப்ப நடந்துட்டுத்தானே…இருக்குது”.

சேந்து கெணத்து ஊட்டு பொன்னுத்தாயிதான் தலையை அசைத்தவாறு சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ஊருக்குள்ளே பைப்புக எல்லாம் போட்டு, குடி தண்ணி கொண்டு வர்றதுக்கு முந்தி இந்த ஆத்தாவிக ஊட்டுல இருக்குற த்துல சனங்க எல்லாரும் தண்ணி செந்தி எடுத்தாங்க. அந்தக் கெணறு அதுக்கும் பொறகு வந்த வேசைக்கு வத்திப்போச்சு! ஊட்டுல மின்னாலெ எடங்கோடா இருக்குதுன்னு வண்டி வண்டியா மண்ணேக் கொண்டாந்து கொட்டி கெணத்தை மூடிப் போட்டாங்க! ஆனாலும், இந்த ஆத்தாவிகளுக்கு அந்தப்பேரு இன்னமும் மறையிலெ! அந்தக் கெணறு இருந்த எடத்துல இப்ப புதுசா திண்ணே கட்டியிருக்குது.”

அதில் உட்கார்ந்து கொண்டுதான் நாகரத்தினத்திடம் அய்யாமலையில் சாமி சொன்ன சங்கதியை விளக்கியவாறு இருந்தாள்.

“கல்லுக்கோழி கூவும்னா என்னன்னு அர்த்தமாச்சா அம்மிணி? அங்கெங்கெ மில்லுக உண்டாகி வேலைக் கணக்குக்கு சங்கு ஊதிட்டு இருக்குறதெ ஆண்டவன் இப்படி அடையாளங்காட்டிச் சொல்றாரு! போத்தனூரு, மதுக்கரை, கெழபக்கம் இருக்குற குனியமுத்தூரு…. இங்கெயெல்லாம் ஆகியிருக்குறது பொய்யா…?

“அது செரிங்க அப்பறம் கானல்ல வௌக்கெரியும்னா என்னுங்க ஆத்தா அர்த்தமுங்க.”

“…அது தெரியிலையா அம்மணி! இப்ப அப்பிடிக்கப்பிடியே மலங்காட்டு வெரைக்கும். அங்கங்கெ தோட்டங்க ஆகி கரண்டு லைட்டுக எரியுதில்லெ. அதையத் தான்  அப்பிடிச் சொல்லியிருக்குது. உன்னமும் நாளா சரிதியாப் பாருங்க! இந்தக் கொளத்துப் பாளையத்து வெள்ளாமைக்காடுக பூராவும் கோவைப்புதூர்னு ஆகிட்டிருக்கிறாப்ல் தெக்கு மின்னேயும், மேக்கு மின்னேயும் இருக்குற காடுகள்லெ எல்லாம் ஊடுக் ஆகி, அங்கெயெல்லாம் கரண்டு லைட்டு எரியத்தானே போகுது. அப்பொ அந்த அய்யாமலையான் சொன்ன வாக்கு மெய்யாப்போச்சுன்னு சனங்க புரிஞசுக்கும் போ… அம்மணி

பற்கள் முழுவதுமாக விழுந்து விட்டார்போல் தெரிந்தாலும் கடைவாய்ப் பற்கள் இரண்டு அந்த ஆத்தாளின் வாயைவிட்டு  விழுவதற்குப் பிரியமில்லாமல் கெட்டியாக ஒட்டிக் கொண்டுதானுள்ளன.

“அந்தப் பெல்த்தெ வெச்சுத்தான் வெத்தலெ பாக்கை நல்லா பஞ்சுபோலக் கல்லுல வெச்சுக் கொட்டி நசுக்கி எடுத்து கடவாய்லெ போட்டு  அடக்கிக்கும். அப்பறம் இப்படி பக்கத்துல வந்து உட்கார்றவிக கூட நாட்டு வளப்பம் பேசிட்டு இருக்கும்.”

பொன்னுத்தாயைப் பற்றிய அபிப்ராயம் இதுவாக இருந்தது. நாகரத்தினம் பேசிக்கொண்டு இருந்துவிட்டுப் போன பிறகும் அங்கே உட்கார்ந்திருந்தாள் ஆத்தா! நெற்றிச் சுருக்கங்களின் மேல் கையை வைத்து கண்களை இடுக்கி ஆகாயத்தைப் பார்த்தாள் மத்தியானத்தைத் தாண்டி பொழுது மேற்கே சரிந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள். வீட்டு வாசலின் ஓரமாய் பாகற்கொடி படர்ந்திருந்தது. சிட்டுக் குருவிகள் ஒன்றையொன்று விரட்டியபடி பறந்ததில் இலைகள் அசைந்தன. தென்னை மட்டைகளில் குந்தியபடி அணில்கள் எதையோ கொறித்து கொண்டிருந்தன.

இனிப்பும், பலகாரங்களும் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்து பொறந்தவகாரியைப் பார்த்துவிட்டு அவர்கள் போய் விட்டனர். வளைகாப்புச் சீரைச் செய்யக் கண்ணத்தாளின் வீட்டார் கொண்டிருக்கும் ஆர்வத்திற்கு எந்த விதத்திலும் குறையாமல் சுப்பையனின் பெற்றோர்களுக்கும் ஆசை உண்டாகியிருந்தது.

“ச்செரி..! அதுக்குத் தக்குன தருணம் வரோணுமில்லெ…”

மருமகள் , தங்கள் மீது கொண்டிருக்கும் அன்புக்கும் அனுசரணைக்கும் தகுந்தாற்போல் பிள்ளைப் பாக்கியத்தையும் விரைவிலேயே எட்டிவிட்டது மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. இவர்களுக்கெல்லாம் அக்கறையுடன் சோறு போட்டுவிட்டு கொழுந்தனாருக்கும் எடுத்து வைத்து விட்டு சாப்பிட்டு முடித்து படுக்கைக்கு வந்தாள் கண்ணாத்தாள்.

செல்வராசு சில நாள்களில் நேரங்கழித்துதான் வருவான். படிப்பு முடித்த கையோடு அவனுக்கும் வேலை கிடைத்து விட்டால்.’கண்ணாலங்காச்சி’ என்று ஒன்றை ஏற்பாடு பண்ணிவிடலாம்.

வீட்டின் அடுத்த தாழ்வாரத்தில் பெரிய மகன் தனிக்குடித்தனக் காரணம் போல இருக்கிறான்.” அந்த மருமகளுக்கு இன்னமும் ஏனோ கடவுளு கண்ணு முழிக்க தாமசம் பண்ணுதே” என்று இப்போதும் முருகம்மாளின் உள்ளம் தேம்பியது. பொன்னுத்தாயி எப்பவோ தன்னிடம் கூறிய நாட்டு வைத்திய முறைமை ஒன்று அரிதான பூவைப்போல் நினைவுக்குள்ளே சில்லென்று பூத்தது.

…”எல்லாம் நம்ப தெக்குக் காடுகரைகள்ல மலையடிவாரங்கள்லெ இருக்குற தழைதாம்பு வைத்தியந்தான் முருகம்மா..! சலிக்காமச் சுத்துனா நாலைஞ்சு நாள்லெ அத்தனையும் சேகரிச்சுப் போடலாம். நம்ம வீரண்ணனுக்குங்கூட இதுக தெரிஞ்சிருக்கும். சுப்பைங்கிட்டேச் சொல்லி அவிகலெயும் வேண்ணாக்கூட கூட்டியிட்டு நாஞ்சொல்ற தழைக ஒவ்வொண்ணுலயும் ஒரு கைப்பிடி அளவுக்குக் கொண்டு வரச் சொல்லு சாமி!

…வெள்ளருகு, ஆதண்டந்தழை, பாளைத்தழை, சிறியாநங்கை, பெரியநங்கை, கருஞ்சுக்குட்டித்தழை, கருநாயுருவி, விடத்தளாந்தழை, குட்டைவேரான், தின்னித்தழை, வேலிப்படத்தலாந்தழை, முசுமுசுக்கைத்தழை, வேப்பந்தழை இதுகள்ல கொஞ்சங் கொஞ்சம் கெடச்சிதுனாலும் போதும்! அதுகளே நல்லா தொவையல் பதத்துக்கு அரச்சு எடுத்துச் சாறு பிழிஞ்சு அதைய வடிகட்டி எடுத்துக்கோணும்! வெடியால வெறும் வவுத்துல தொடர்ச்சியா மூணு நாளைக்குக் குடிச்சுப் போட்டாப் போதும்…!

ஒரு நாளைக்கு முக்கா டம்ளருங்குற கணக்கு ! இந்த மருந்துக்கு மிருனது எதும் கெடையாது.ஒரே மாசத்துல  பலன் கெடைக்கும்.

இதை நாகரத்தினத்திடம் சொல்லி பரீட்சித்துப் பார்த்தால் என்ன? அவளுக்ககிருக்கும் குறைபாடு இதனால் நிவர்த்தியாகி விடாதா? அவளும்….இந்த இளைய மருமகளைப் போல்தாய்மைப் பேற்றை அடைந்து ஆனந்தப்படட்டுமே !

பேரன் பேத்திகள் வீடு முழுக்க விளையாடித் திரிவதைப் போன்று நினைவுகள் முருகம்மாளை, சீக்கிரத்தில் தூங்கவிடாமல் கண் விழிக்க வைத்தன….!

(தொடரும்)