நியாயவிலை கடை நிர்வாகத்தை அபகரிக்க முயற்சிப்பதாக ஆதிவாசி பெண்கள் புகார்

கோவை: கோவை ஆலமரமேடு பகுதியில் ஆதிவாசி பெண்கள் குழு நடத்தும் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் நிர்வாகத்தை சிலர் அபகரிக்க முயற்சி செய்வதாகவும், கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த திட்டமிட்டிருப்பதாகவும் ஆதிவாசி பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 26 ஆண்டு காலமாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நியாயவிலைக்கடை ஆதிவாசி பெண்கள் குழுவால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒன்றிய குழு உறுப்பினர்களான சம்பத்குமார், புனிதா ராஜ் சாமிநாதன் ஆகிய மூவரும் நியாய விலை கடை நிர்வாகத்தை அவர்களுக்கு விட்டுத்தர வேண்டும் என்று பிரச்சினை செய்கின்றனர். கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த திட்டமிட்டு இவ்வாறு செய்து வருகின்றனர். எனவே ஆதிவாசி பெண்கள் நடத்தும் இந்த நியாய விலை கடையின் நிர்வாகம் பறிபோகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.