நிவார் புயல்: நல்லதே நடந்தது!

பொதுவாகவே கடந்த சில பத்தாண்டுகளில் உலகெங்கும் காலநிலை மாற்றத்தின் காரணமாக புயல்களின் எண்ணிக்கை அதிகரித்தவாறே இருக்கிறது. அதற்கும் தமிழகமும் ஒரு சாட்சி. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஆறு முறை தமிழகத்தை புயல் தாக்கியிருக்கிறது. புயல், மழை, வெள்ளம் காரணமாக பல உயிர்கள் பலியானதும், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதிலும் வர்தா புயல், கஜா புயல் ஆகியவை இத்தனை முன்னேறிய மாநிலமாகக் கருதப்படும் தமிழகத்தைப் புரட்டி எடுத்துவிட்டன என்றால் அது மிகையாகாது.

இந்நிலையில் நிவார் என்கிற ஒரு அதிதீவிர புயல் தாக்கப் போகிறது என்ற செய்தி வந்ததும் எல்லோருக்கும் மனதில் ஒரு அச்சம் வந்தது உண்மைதான். ஆனால் கடந்த புயல்களில் இருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம், இந்த சமயத்தில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை நடைமுறைப்படுத்திப் பார்ப்பதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. நமது அரசாங்கம் தனது அத்தனை சக்திகளையும் களமிறக்கி மிகத்திறமையாக செயல்பட்டு இழப்புகளை முடிந்தவரை தவிர்த்து பாராட்டுகளைப் பெற்றது. இன்னொருபுறம் நிவார் புயல் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தாமல் அதிக மழைப்பொழிவைத் தந்ததோடு கரையைக் கடந்துவிட்டது என்றும் சொல்ல வேண்டும்.

முதலில் வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் ஆய்வாளர்கள் என்று எல்லோரின் கணக்கீடுகளும் இந்த முறை மிகத் துல்லியமாக அமைந்தது, புயலை கவனித்து செயல்பட நல்ல வழிகாட்டுதலாக அமைந்தது. அதற்கேற்ப அரசாங்கத்தின் அத்தனை துறைகளும் இந்த முறை இணைந்து சிறப்பாக செயல்பட்டன. சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், வருவாய், பொதுப்பணி, வேளாண் மற்றும் மின்சாரத் துறையினர் என்று எல்லாரும் தங்கள் பணிகளை இணைந்து சூழ்நிலைக்கேற்ப பணியாற்றியதால் இழப்புகள் கணிசமாக குறைக்கப்பட்டன.

தமிழக முதலமைச்சரான எடப்பாடி அவர்கள் நேரடியாக களமிறங்கி அவசரகால கட்டுப்பாட்டு மையத்தை அமைத்த இயங்கியதோடு, புயல் பாதிக்கக்கூடிய ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து பணிகளை ஒருங்கிணைக்கச் செய்தார். அதைப்போலவே வெள்ளம் பெருக்கெடுத்த செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பத் தொடங்கியபோது பொதுப்பணித் துறையினர் சிறப்பாக செயல்பட்டு படிப்படியாகத் திறந்து விடும் நீரின் அளவை அதிகரித்து நிலைமைக்கு ஏற்ப செயல்பட்டதால் வர்தா புயலின்போது பட்டதைப்போல துயர நிலை மீண்டும் ஏற்படவில்லை. இன்னொரு புறம் அவசரகால மீட்புப் படையினர் தகுந்த முன்னேற்பாடுகளுடன் புயல் கரையைக் கடக்கும்போது நிலைமையை எதிர்கொள்ளது தயாராக இருந்தனர். கஜா புயலின்போது கிடைத்த அனுபவத்தால் மின்சாரத் துறை இந்த முறை மிகுந்த விழிப்புணர்வுடன் பணியாற்றியது. புதிய கம்பங்கள் தயார் நிலையில் வைப்பது தொடங்கி மின்சாரத்தைத் தேவையான சமயங்களில் துண்டிப்பது, மின்சார வழங்கல் பாதிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் இணைப்பு தருவது வரை தொடர்ந்து சலிக்காமல் பணியாற்றியது நன்கு கை கொடுத்தது.

எங்கெல்லாம் புயலால் பாதிப்பு அதிகமிருக்கும் என்பதை கணக்கிட்டு அங்கிருந்த மக்களை எல்லாம் முன்கூட்டியே அகற்றி தகுந்த பாதுகாப்பான மையங்களில் தங்க வைப்பது தொடங்கி, மழை நீரை வெளியேற்றுவது, மின்சார வழங்கலை சீரமைப்பது என்று அரசாங்கம் படிப்படியாக செயல்பட்டது. ஒருநாள் முன்னதாகவே அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதும், கடலூர் போன்ற பகுதிகளல் மீனவர்களுக்கு தகுந்த முறையில் தகவல் கொடுத்து அவர்கள் கடலுக்குச் செல்லாமல் பார்த்துக் கொண்டதோடு, கடலுக்குச் சென்றவர்கள் கரை திரும்புவதை உறுதிசெய்து கொண்டதும் நல்ல பலனைத் தந்தது. மேலும் பேருந்து, ரயில் உள்ளிட்ட போக்குவரத்தை தடை செய்தது, தேவையற்ற மக்கள் நடமாட்டத்தைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய உதவியது.

அதைப்போலவே, விவசாயிகள் பலர் கஜா புயலின் கோர தாண்டவத்தை நினைவு கூர்ந்து பயிர் இழப்பீடு குறித்து அச்சமடைந்தபோது அதனை தகுந்த முறையில் அறிவித்து ஐயங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டது விவசாயிகளிடம் ஒரு நம்பிக்கையை விதைத்தது.

இன்னொரு பக்கம் நிவார் புயல் அதிதீவிர புயலாக இருந்தாலும் திசை மாறிப் போகாமல் வேறு விதமாக சுழன்றடித்து குழப்பாமல் எதிர்பார்த்தபடியே இரவு கரையைத் தொட்டு விடிவதற்குள் முழுமையாக கரையைக் கடந்தது. திசை மாறி டெல்டா மாவட்டங்கள் பக்கமோ அல்லது இன்னும் தீவிரமாக சென்னை நகரத்தையோ தாக்கியிருந்தால் நிலைமை இன்னும் சிக்கலாகி இருக்கும். ஆனால் அவ்வாறு நேராமல் இயற்கை நம்மிடம் கருணை காட்டியது என்றே சொல்ல வேண்டும்.

இப்போது வரை நிவார் புயலால் பெரிய, கடுமையான பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ இல்லை என்றே சொல்லலாம். மழை நீரில் தரைப்பாலங்கள் அடித்துச் செல்வது, விவசாய நிலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி பாதிப்பு, சில தாழ்வான பகுதிகளில் வீடுகள் பாதிப்பு என்று சிக்கல்கள் இருந்தாலும் அரசாங்கம் அவற்றை எல்லாம் நல்ல முறையில் கவனிக்கும் என்று நம்புவோம்.

ஆனால், நம் கடமை இத்தோடு முடிந்துவிடவில்லை. வரும் டிசம்பர் மாதத்திலேயே இன்னும் இரண்டு காற்றழுத்த மண்டலங்கள் உருவாக உள்ளதையும், அதில் ஒன்று புயலாக மாற வாய்ப்புள்ளதையும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே அவற்றையும் எதிர்கொள்ளக் கூடிய அளவு அரசாங்கமும் மக்களும் தயாராக விழிப்புடன் இருக்க வேண்டும். இயற்கையை நாம் தடுக்கவோ, எதிர்க்கவோ, வெல்லவோ முடியாது. ஆனால் இயைந்து வாழக் கற்றுக்கொள்ளலாம். அதுதான் இயற்கை நமக்கு பல ஆயிரம் ஆண்டுகளாக கற்றுக் கொடுத்திருக்கும் ஒரே பாடம், அதை கடைபிடிப்போம், இயற்கையோடு இணைந்து வாழ்வோம்!