வாழ்வை மாற்றும் தகவல் தொடர்பு

கோயம்புத்தூர் மேலாண்மை சங்கம் சார்பில் மேலாண்மைத் துறை சம்பந்தமாக ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், தகவல்  தொடர்பு (communication) என்ற தலைப்பில் கருத்தரங்கு அண்மையில்  நடைபெற்றது.

இதில் தகவல்  தொடர்பு ஒரு நிறுவனத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார் விடபிள்யூஆர் லேப் புராடக்ஸ் பிரைவேட் லிமிடெட், அறிவு மேலாண்மை உதவி மேலாளர் பிரியா மாலினி அவர் கூறியதாவது: ‘‘ஒரு செய்தியை ஒருவரிடமிருந்து, ஒருவருக்கோ அல்லது பலருக்கோ எடுத்துரைப்பதாகும். இது வாய்மொழி மற்றும்  வாய்மொழியில்லா தகவல் தொடர்பு என இருவகைப்படுகின்றன.

வாய்மொழி தகவல் தொடர்பு என்பது வாய்மொழி மூலமாக சொல்லப்படும்  தகவல், அதாவது பேசுதல். இதில் பல வகையான பேச்சுகள்  வருகின்றன. புன்னகை, கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளை வாய்மொழி மூலமாக வெளிப்படுத்துதல். எந்த ஒரு வாய்மொழித் தொடர்பும் நாம் கவனித்துப் பேச வேண்டும். காரணம், நம்முடைய பேச்சுகளின் மூலம் நம்முடைய குணாதிசயங்களை அறிந்துகொள்ள முடியும். அவை நல்லவையாக இருந்தாலும் சரி. தீயவையாக இருந்தாலும் சரி. ஒருவருடைய கம்யூனிகேசன் அவருடைய நன்னடத்தையை வெளிப்படுத்தும்.

வாய்மொழியில்லா தொடர்பு: இது உடல் அசைவுகளின் மூலம் தகவலை வெளிப்படுத்துபவை. உதாரணமாக, நாம் சிரிக்கிறோம் என்றால், அது சந்தோசத்தை வெளிப்படுத்தும். முறைத்துப் பார்க்கிறோம் என்றால், கண்ணைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறாக வாய்மொழித் தொடர்பற்ற கம்யூனிகேசன் நம்முடைய தரத்தை வெளிப்படுத்தும். மொத்தத்தில் கம்யூனிகேசன்  என்பது ஒரு மனிதனுடைய செய்கை மட்டுமல்ல, அவரின் நன்னடத்தையை தோலுரித்துக் காட்டும் ஒரு சிறந்த உபகரணம் ஆகும் என்றார்.

மேலும், தொடர்பு பாணி பல விதங்கள் உள்ளன. அது ஒவ்வொரு மனிதனின் குணங்களைப் பொறுத்தது. உதாரணமாக, Passive

(மந்தமான) குணங்களைக்  கொண்ட மனிதர்கள், எந்த ஒரு செயலையும் சொன்னால், இதை நான் செய்யமாட்டேன் என்று சொல்வார்கள். இது நாளடைவில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி, தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும். அடுத்ததாக, Aggressive

– (ஆக்கிரமிப்பு) – இவ்வகை குணமுள்ளவர்கள், ஆளுமைத்  திறனை மற்றவர்கள் மீது செலுத்தக் கூடியவர்கள். மூன்றாவதாக, Assertive (உறுதியான) இவர்கள் எந்த ஒரு செயலிலும், சொல்லிலும் உறுதியைக்  கையாளுபவர்கள்.

இந்த மூன்றில் நாம் எந்த வகையைச் சார்ந்தவர்கள் என்பதை நாம்தான் உறுதி செய்துகொள்ள வேண்டும். ஏனென்றால் நம்முடைய பேச்சும், செயலும்தான், நாம் எந்த வகையைச் சார்ந்தவர்கள் என்பதைத்  தீர்மானிக்கிறது. மேலும், இதுபோன்ற சிறந்த தகவல்களை குழந்தைகளுக்கு சிறு வயது முதலே சொல்லிக் கொடுக்க வேண்டும். அதன் பிரதிபலிப்பே குழந்தையின் எதிர்காலம்’’ என்று கூறினார்.