“பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் அத்தனை டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள்” – நடிகர் பரத்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகிய இருவரும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தனர்.

நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க விதவிதமான டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு கொடுத்து பிரச்னைகளை கிளப்பிவிட்டாலும் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை என்றே பார்வையாளர்கள் கருதி வருகின்றனர்.

குசும்புத்தனம் செய்து கொண்டு அவ்வப்போது வெடிகளை கொளுத்திப் போட்ட சுரேஷ் சக்ரவர்த்தி வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது நிகழ்ச்சிக்கு பலவீனம் என்கின்றனர் பிக்பாஸ் பார்வையாளர்கள்.

இதையடுத்து சுசித்ரா வீட்டுக்குள் வந்ததும் சுச்சி லீக்ஸ் விவகாரங்கள் வெடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் வந்த வேகத்தில் வீடு திரும்பினார் சுசித்ரா. இந்த வாரத்தில் பாலாஜி சக போட்டியாளர்களான ஆரி, அர்ச்சனா, ரியோ உள்ளிட்டோருடன் பிக்பாஸ் வீட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூகவலைதளங்களில் கருத்து தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் நடிகர் பரத், “பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் அத்தனை டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள். அவர்களிடம் கன்டென்ட் இல்லை” என்று கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்திருக்கும் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி, “நாம் இரண்டு பேரும் உள்ளே செல்வோமா” என்று கேள்வி எழுப்பினார். இந்த உரையாடலை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் இருவரும் உள்ளே போனால் நிகழ்ச்சி நன்றாக இருக்கும் என்று கமென்ட் பதிவிட்டுள்ளனர்.