நிவர் புயலால் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை – முதல்வர்

நிவர் புயல் இன்றிரவு தீவிரப் புயலாக (severe cyclonic storm) கரையைக் கடக்க உள்ளதால் பாதிப்பைக் கருத்தில் கொண்டு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை தொடரும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

நிவர் புயல் தற்போது தீவிரப் புயலாக (severe cyclonic storm) வலுப்பெற்றுள்ளது. இது தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே சுமார் 250 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 300 கி.மீ. தொலைவிலும், கடலூருக்குத் தென்கிழக்கே சுமார் 240 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இன்று மதியம் இது அதி தீவிரப் புயலாக (very severe cyclonic storm) வலுப்பெற்று இன்றிரவு வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று இரவு கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 தினங்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மதியத்துக்கு மேல் புயல் கரையைக் கடக்கும் என்பதால் இன்று பொது விடுமுறை என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், புயல் மெதுவாக நகர்ந்து வருகிறது. இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும். இதனால் டெல்டா, வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளையும் நாளை மறுநாளும் மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.