தளபதி 65-ல் இருந்து விலகிய ஏ.ஆர்.முருகதாஸ்

அஜித்குமார் நடித்த தீனா படத்தின் மூலம் பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி ஆகிய படங்கள் மூலம் மேலும் பிரபலமானார். விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததன் மூலம் நட்சத்திர இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

தொடர்ந்து விஜய் மற்றும்  ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் 4-வது முறையாக இணைந்து பணிபுரிய ஒப்பந்தமானார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இதன் பணிகள் மும்முரமாகத் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 65’ என்று தலைப்பிடப்பட்டது.

மேலும், இது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்பட்டது. இந்தப் படத்தின் கதையைக் கேட்ட நடிகர் விஜய் முதல் பாகம் நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாகத்தில் திருப்தி அளிக்காததால் இரண்டாம் பாதியை மட்டும் மாற்றுமாறும் கூறியுள்ளதாக தகவல் வெளிவந்தன. எனவே ஏ.ஆர்.முருகதாஸ் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதை திருப்தி இல்லை என்று தெரிவித்ததாகவும், அதனால் அவர் தளபதி 65 படத்திலிருந்து விலகியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அந்தக் கதை கைவிடப்படுகிறதா? இல்லை வேறு இயக்குனர் இயக்குவாரா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.