நடமாடும்  கட்டுப்பாட்டு மைய வாகனத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்

சென்னை மாநகராட்சியின் சார்பில் நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (24.11.2020) ரிப்பன் மாளிகை வளாகத்தில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்து, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுபாட்டு மையத்தில் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, நிவர் புயல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மத்திய அரசின் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு துறைகளின் விவரங்களை சேகரித்து, ஒருங்கிணைத்து நடைமுறை ஆய்வு செய்து, ஓரிடத்தில் இருந்து அதிகளவு விவரங்களை கையாளும் வைகையில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு மையம் மழையளவு, சுற்றுச்சூழல் தன்மை, வெள்ளத்தை  கண்காணிக்கும் உணர்வு கருவி, திறன்மிகு தகவல் கம்பம், திடக்கழிவு மேலாண்மை மற்றும் வாகன நிறுத்த மேலாண்மை ஒருங்கிணைப்பு ஆகிய பணிகளை கண்காணிக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று கரையை கடக்கும் என அறிவித்துள்ளது.  இந்தப் புயலுக்கு நிவர் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் சென்னையில் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் குறித்த தகவல்களையும், மழைநீர் வடிகால்வாய்களில் வெளியேறும் மழைநீர் கால்வாய்களின் முகத்துவாரங்களை அடையும் போது அந்த நீரின் அளவை கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும், திறன்மிகு தகவல் கம்பங்களின் (Smart Pole) மூலம் நகரின் பல்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ள மழையளவும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படுகிறது.

பின்னர் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது : வடகிழக்கு பருவமழை 28.10.2020 அன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று (24.11.2020) 38.7 செ.மீ. அளவு மழை பெய்துள்ளது.  இதுவரை 90 மரங்கள் விழுந்து அவை உடனடியாக அகற்றப்பட்டன.  கடந்த 24 மணி நேரத்தில் 5.9 செ.மீ. அளவு மழை பெய்துள்ளது.  பெருநகர சென்னை மாநகராட்சியிலுள்ள 176 நிவாரண மையங்களில் 77 மையங்கள் தயார்நிலையில் உள்ளன. இன்றைய மழையினால் 5 இடங்களில் தேங்கி இருந்த மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் 044-25384530, 044-25384540 என்ற தொலைபேசி எண்கள் கொண்ட 24 x 7 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 1913 என்ற எண் கொண்ட புகார் மையமும் உள்ளது. விழுந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றுவதற்காக வாகனத்தில் பொருத்தப்பட்ட இரம்பங்கள் இரண்டு, கை மற்றும் டீசல்/பெட்ரோலினால் இயங்கும் இரம்பங்கள் 360, மின்சாரத்தினால் இயங்கும் இரம்பங்கள் 11, இரவு பணிக்குழு, 18 உயர் கோபுர விளக்குகள் ஆகியவை மண்டல அலுவலகங்களில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 15 மண்டலங்களிலும் 5/7.5/10 குதிரைத் திறன் கொண்ட 570 மோட்டார் பம்புகள், மின்சார கம்பம், அறுந்து தொங்கும் மின்கம்பிகள் மற்றும் மின் இணைப்பு பெட்டிகளை மழைக்காலங்களில் சேதமடையாமல் இருப்பதை கண்காணிக்க குழு, 52 இடங்களில் களத்தில் நின்று பணிபுரிய தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள்/மாநகர பேரிடர் மீட்பு குழுக்கள்/மீட்பு குழுக்கள்  தயார்நிலையில் உள்ளன என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். பின்னர், நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு வாகனத்தில் பயணித்து அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.