ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு.. நாகை அருகே வயலில் கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக திருக்குவளை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வயலில் கறுப்புக்கொடி கட்டி அவர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான பணிகள் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 22 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

மக்களின் எதிர்ப்பை மீறி நடத்த ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என மத்திய அரசு உறுதியளித்ததையடுத்து நெடுவாசல் மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டது.

இதற்கு விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நாகை மாவட்டம் திருக்குவளை அருகே வயலில் கருப்புக் கொடி கட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தால் ஓஎன்ஜிசி குழாய்களை அகற்றப்போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.