கடமையைக் கண்டேன்!

ஒரு பணியை கடமைக்காக செய்வது வேறு. அதைக் காதலுடன் ஏற்று நிறைவேற்றுவது வேறு. அதே கடமையை நேர்மையுடன் செய்யும் மனிதர்கள் சிலரே. பொதுவாக, அரசு சார்ந்தவர்களிடத்தில் குறை காண்பதும், அவர்களை குறை பேசுவதும் வாடிக்கை.
குறை பேசும் அதேசமயம், நேர்மையானவர்களைக் காணும்போது பாராட்டுவதும் சாலச்சிறந்தது. அப்போது சமூகத்தில் வெகுவான குறைகள் மறைந்து, நிறைகளும் பெருக வாய்ப்புண்டு. அதற்கான ஓர் பாராட்டுத் தளம் இது. இங்கே, வாசகர்கள் தாங்கள் நேரடியாகக் கண்ட நல்ல செயல்வீரர்களைக் குறித்த அனுபவத்தை எழுதலாம். முன்னோட்டமாக, எனது அனுபவம்..
எனது தந்தை 25 வருடங்களுக்கு முன் வாங்கிய நிலம் பொள்ளாச்சியில் உள்ளது. நாங்கள் கோவைக்கு வந்த ஒருசில வருடங்களுக்குப் பிறகு எங்களது நிலத்தைப் பார்வையிட சென்றோம். எங்கள் வீட்டுமனையானது, அந்த லேஅவுட்டின் கடைசி பகுதி (கார்னர் சைட்). அதில், அடுத்த லேஅவுட் குடியிருப்புவாசியின் பாத்ரூம் 2 அடி எங்கள் சைட்டின் உள்ளே கட்டப்பட்டிருந்தது. அதைப் பார்க்கும்போதே தெரியும், அது அத்துமீறி கட்டப்பட்டது என்று. இதனால் அந்த மனையை விற்கவோ அல்லது அங்கே வீடு கட்டவோ முடியவில்லை. இதையடுத்து, பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிலத்தை அளந்து தருமாறு மூன்று முறை மனு அளித்தேன்.
ஒரு மனு காணாமல் போனது. மற்ற இரு மனுக்களின்பேரில் களத்தில் எனது பெற்றோர் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வில், நில அளவையர் உள்ளிட்டோர் பாத்ரூம் கட்டப்பட்டது தவறு என்றனர். ஆனால் மீண்டும் மீண்டும் உறுதியாக மறுத்ததால், எதிர்தரப்பு குடியிருப்புவாசி மீது விரோதப் பார்வை விழுந்தது. மேலும், இதனால் எங்கள் குடும்பத்தில் குழப்பம், அதிர்ச்சி, ஏமாற்றம், கோபம்.
இதற்கிடையில், எனது தந்தை மரணித்துவிட இந்த நிலப் பிரச்னை கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2020 மார்ச் மாதம் நிலத்தை அளந்துதர நான்காவது முறையாக மனு அளித்தேன். இந்நிலையில் எங்கள் மனைக்குப் பின்னால் உள்ள காட்டைச் சுற்றி வேலி அமைத்ததாலும், எனது மனைக்கு முந்தின நிலத்தில் வேறொருவர் வீடு கட்டியதாலும், ஆக்கிரமிப்பு காரணமாகவும் எங்கள் மனையைச் சுற்றி மூன்று புறமும் அடைபட்டது.


இந்த நிலையில் கொரோனா வந்துவிட, மார்ச் மாத மனுவிற்கு கடந்த திங்கள்கிழமை (02-10-2020), சின்னாம்பாளையம் மணியகாரர் அலுவலகம் வர நில அளவையரிடம் இருந்து அழைப்பு வந்தது.
நிலம் எனது வயதான தாய் பெயரில் உள்ளபடியால் நில அளவையரே, ‘வயதானவரை அலைக்கழிக்க வேண்டாம். அவரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெற்றுவர’ சொன்னார். அதன்படி, குறிப்பிட்ட நாளில் அந்த நில அளவையர், விஏஓ, உதவியாளர் ஆகியோருடன் எங்கள் நிலத்திற்கு சென்றேன். அப்போது பகல் மணி 12.30க்கு மேல்.
நிலத்திற்கு வந்தவுடன் அவருடன் வந்த அலுவலக உதவியாளர், ‘இந்த இடமா? இதுகுறித்து முன்னரே அளந்தாயிற்று. இதை அளக்க வேண்டாம் சார், நாம் போலாம்’ என்றார். ஆனால் நில அளவையரோ, ‘இவர்களது மனு என்னிடம் வந்துள்ளது. நான் அளந்துதான் பார்க்க வேண்டும். நீங்கள் டேப் எடுத்துக் கொண்டு செல்லுங்கள்’ என்று உத்தரவிட்டார். முதலில், எங்கள் மனைப்பிரிவில்தான் பாத்ரூம் பகுதி இருப்பதாகவே இவரும் தெரிவித்தார். பின்னர், எதிர்தரப்பு அசல் பத்திரங்களை வாங்கிப் பார்த்துவிட்டு, மொத்த பகுதியையும் அளக்க வேண்டும் என்று கூறி, எங்கள் நிலத்தைச் சுற்றி கிழக்கு, மேற்கு, வடக்கு என முட்புதர்கள், கரடுமுரடான பகுதிகள், காடு, மேடு, முள்வேலி, எதிர்தரப்பு வீடுகள், அவர்கள் பகுதியில் உள்ள சாலை, எங்களது நிலம் உள்ள வரிசையில் கட்டப்பட்ட வீடுகள், நிலத்திற்கு பின்புறம் உள்ள காடு (காட்டுக்காரர் வேறொரு பகுதியில் இருந்தார். அவரை வீடு தேடிப்போய் அழைத்துவந்து) என அந்தப் பகுதியை இன்ச், இன்ச் ஆக சுட்டெரிக்கும் வெயில், மதிய உணவு வேளை, உதவியாளரின் அக்கறையின்மை, புலம்பல் என எதையும், யாரையும் கண்டுகொள்ளாமல் ‘கடமை ஒன்றே கண்ணாயினார்’ என்பதற்கேற்ப நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த ஓடோடி தன் கடமையைத் திறம்பட செய்து முடித்ததைக் கண்ணாரக் கண்டேன்.
பின்னர், எதிர்தரப்பினரிடம் ‘நீங்கள் பாத்ரூம் பகுதி கட்டியிருப்பது உங்கள் நிலத்தில்தான்’ என்றார். அப்படியெனில், இதுவரை அவர்களைக் குறித்து நானும் எனது குடும்பத்தாரும் நினைத்திருந்தது? எங்கள் நிலம்? ஆகிய கேள்விகளுக்கு பதிலாக அவர், ‘உங்கள் நிலத்திற்கு மேற்கே உள்ளவர்கள்தான் உங்கள் நிலத்தில் 4 மீட்டர் (12 அடி) தவறுதலாக வீடு கட்டியுள்ளனர்’ என்று இதுவரை நாங்கள் அறியாத, எவரும் தெரிவிக்காத உண்மையை, தெள்ளத்தெளிவாக தக்க சான்றுகளுடன் எடுத்துரைத்தார். எதிர்பாராத திருப்பம்.
பின்னர், ஆக்கிரமிப்பு வீட்டு உரிமையாளரிடமும், ‘நீங்கள் இவரது இடத்தில்தான் வீடு கட்டியுள்ளீர்கள். மேலும் தகவலுக்கு எங்கள் அலுவலகம் வாருங்கள். விரிவாக விளக்கம் தருகிறேன்’ என்று மதியம் 2.30 மணிக்குக் கூறிச்சென்றார்.
இனி, இந்த புதிய பார்வையில் அடுத்து நடப்பதை காலம்தான் அறியும். ஆனால் எந்தவொரு பிரதி உபகாரமும் எதிர்பாராமல், பணியில் இம்மி பிசகாமல், முகம் சுழிக்காமல், வேலையை நாளை என்று தள்ளிப்போடாமல், சிறிதும் சலிப்பின்றி, யார் மனம் நோகும்படியும் பேசாமல், மரியாதையுடனும், அதேநேரம் துணிவுடனும் பேசிய, எடுத்த வேலையை ஒரே தடவையில் சிறப்பாக செய்துமுடித்த ‘கடமை வீரர்’, அந்த நில அளவையர் திரு. கே.கிருஷ்ணபிரசாத் அவர்கள் பாராட்டுக்குரியவர்.
இந்த கலியுகத்தில் கடவுளும் வேண்டாம், காசும் வேண்டாம், கடமைதான் என் பாதை. அதற்கு முன் எதுவும் எனக்குப் பெரிதல்ல என்று வாழும் இவரைப் போன்ற கடமை, நேர்மை தவறாத அதிகாரிகளால்தான், அரசு மீது இன்னும் நமக்கு மரியாதை இருக்கிறது.
‘நான் இப்படித்தான், என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று தூய நெஞ்சுடனும் மரியாதையுடனும் பேசும் அரசு வகை மனிதர் ஒருவரை சந்தித்த திருப்தியில் இக்கட்டுரையை முடிக்கிறேன். நீங்களும் இதுபோல் ஒருவரை சந்தித்திருந்தால் அந்த அனுபவத்தை எங்களுக்கு எழுதுங்கள். மீண்டும் சந்திப்போம்.
அருள் கார்த்திகேயன்