பாஜக தேசியமகளிரணித் தலைவர் வானதியின் மூன்று மந்திரங்கள்

  • அன்பு சிரிப்பு
  • கண்ணியம்
  • கடின உழைப்பு

இன்றைய சூழலில் உலக அளவில் பல பெண் தலைவர்கள் அரசியலில் வெற்றிக் கொடி நாட்டி, சாதித்துக் கொண்டு இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை அத்திபூத்தாற் போல அங்கொன்றும், இங்கொன்றுமாகவே பெண்கள் அரசியலில் நுழைந்து சாதிக்க முடிகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திய நாட்டின் பிரதமராக ஒரு பெண் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு இங்கு இருந்தாலும் பெண்கள் இந்திய அரசியலில் சாதிப்பது என்பது வாய்ப்புக் குறைவான ஒன்றாகவே தென்படுகிறது.

இந்த சூழலில்தான் தமிழகத்தின் வானதி சீனிவாசன், பாரதிய ஜனதா என்ற ஒரு தேசியக் கட்சியின் மகளிரணித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது. இதற்கு முன்பே இங்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தமிழிசை சௌந்திர ராஜன் இருந்திருந்தாலும், தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராகப் பதவி வகித்தாலும் தேசிய அளவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மகளிரணிப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

இந்தப் பொறுப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது என்பதைவிட அவர் அந்த பொறுப்புக்கு மிகவும் தகுதியானவர் என்பதுதான் இங்கு மிகவும் முக்கியம். வானதி சீனிவாசன் தமிழகத்தின் மேற்குக் கோடியில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் மலை அடிவாரத்தில் உள்ள சிறு கிராமமான உளியம்பாளையத்தில் பிறந்தவர். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கிராமத்து சூழலில் வளர்ந்து பல தரப்பட்ட மக்களின் வாழ்க்கை முறைகளையும் உணரும் வாய்ப்புப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி ஒன்றே உயர்வுக்கு ஏணிஎனும் கோட்பாட்டைக் கடைபிடித்து கல்வி கற்று முடித்த பிறகு மக்கள் சேவையில் ஈடுபட முன் வந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும், அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பும் பயின்று தனது தகுதிகளை வளர்த்துக் கொண்டவர்.

அவர், தேசியக் கட்சியின் மகளிரணித் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது கட்சி வேறுபாடுகளைக் கடந்து பலரின் பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறது. அதற்கு காரணம், மக்களிடையே அவரின் அணுகுமுறை, தகுதி, கடுமையான உழைப்பு ஆகியவையே என்றால் அதுமிகையாகாது.

அவர் பொதுச் சேவைக்குத் தேர்ந்தெடுத்த அரசியல் இயக்கம் தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் செல்வாக்கு குறைந்த, பதவியில் இல்லாத, வாக்கு வங்கி குறைவான இயக்கம். என்றாலும் கொள்கை அடிப்படையில் அதனை விரும்பி ஏற்று பல சோதனைகளுக்கு மத்தியில் கடும் எதிர்ப்பலைகள், விமர்சனங்கள் ஆகியவற்றைக் கடந்து, படிப்படியாக உயர்ந்துதான் இந்த இடத்தை அவர் அடைந்திருக்கிறார் என்பது இந்த நேரத்தில் நினைவு கூறத்தக்கது.

அடுத்ததாக, அவர் ஒரு அரசியல் பின்புலம் வாய்ந்த குடும்பத்தில் இருந்து வருகின்ற வாய்ப்போ, அல்லது வேறு வலிமையான செல்வாக்கு மிகுந்த பின்புலமோ இல்லாதவர். திரைப்பட நடிகை போன்ற பிரபலத் தன்மை எதுவும் இல்லாத நிலையில் தனது கடுமையான உழைப்பால், தனது அரசியல் அறிவாற்றலால், எல்லாவற்றுக்கும் மேலாக தனது பொறுமையால் படிப்படியாக உயர்ந்து இந்த இடத்தைத் தொட்டிருக்கிறார்.

தனிப்பட்ட முறையில் அவரின் எளிமையான, பொறுமையுடன் கூடிய அரசியல் அணுகுமுறை அனைவருக்கும் பிடித்தமானதாக ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்திருப்பது அவரின் சிறப்பு என்றே சொல்ல முடியும். பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு தரம்தாழாமல், யாருடைய மனதும் புண்படாமல் தனது கருத்துகளை எடுத்து வைத்துவருபவர். சாதாரணமாக அவருடன் விவாதம் செய்யும் பலர் வானதி அக்கா என்று அன்புடன் அழைத்து தங்கள் எதிர்க்கருத்துகளை வைப்பதைக் காணமுடியும். மாற்றுக் கருத்துடைய கட்சிகளைப் பற்றிய அவருடைய விமர்சனங்கள் கூட கண்ணியமாக, தெளிவாக அமைவது அவருக்கு கூடுதல் பலம்.

அதைப் போலவே, எந்த ஒரு சூழலிலும் உணர்ச்சி வசப்படாமல் எதிர் விவாதம் செய்வோரிடம் அவர்களின் கருத்துக்கும் மதிப்பளித்துக் கேட்டு பதில் சொல்வது அவரின் இயல்பான வழக்கமாக இருந்து வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பொதுவாழ்க்கையில் ஈடுபடும் பெண்கள் எதிர் கொள்ளும் பல சிக்கல்களை மிக லாவகமாக சமாளித்து கண்ணியமாக வலம் வருவது அவர் மீது பலரும் மதிப்பு கொள்ளும் படிசெய்திருக்கிறது.

அதைப் போலவே நேரடியாக களத்தில் இறங்கி மக்களின் தேவைகளை அறிந்து அவற்றுக்கு ஏற்றவாறு எதிர்வினை புரிவது அவரின் தனிச்சிறப்பான பாணிகளில் ஒன்று. குறிப்பாக, ஜிஎஸ்டி அறிமுகம், கோவையின் தொழில்கள் பாதிக்கப்பட்ட நிலை, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற சமயங்களில் அது குறித்த பணிகளுக்காக அந்தந்தத் துறை சார்ந்தவர்களை அணுகி அரசின் நிலைப்பாடு, தான் சார்ந்துள்ள இயக்கத்தின் நிலைப்பாடு ஆகியவற்றை விளக்கி, அதற்கு செய்ய வேண்டிய பணிகளைக் கேட்டு மேலிடத்தில் எடுத்துச் சொல்வது அவர் வழக்கம்.

மத்திய அமைச்சர்கள் தமிழகம் வரும் போதெல்லாம் உடன் வந்து அப்பகுதியில் செய்ய வேண்டிய மக்கள் நலத்திட்டங்களை எடுத்துரைத்து அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லும் பணியையும் தொடர்ந்து செய்து வருபவர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி தனது நிலையை வலுப்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் தேசிய மகளிரணித் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதப்பட்டாலும், அதனைத் தாண்டி ஒரு தமிழகப் பெண்மணிக்கு கிடைத்த கௌரவம், அவரின் கடும் உழைப்புக்கும், அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகளுக்கும் கிடைத்த அங்கீகாரம் என்றே கருத வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த, குறிப்பாக கொங்கு நாட்டின் கோவை மண்ணைச் சேர்ந்த ஒரு பெண்மணி பொது வாழ்வில் தனது உழைப்பால் இவ்வளவு பெரிய அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது பாராட்டுக்கும், மகிழ்ச்சிக்கும் உரியது என்றே அனைவரும் கருதுகிறார்கள். அவர்களுடன் இணைந்து நமது ‘தி கோவை மெயிலும்’ மன மார்ந்த வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறது.

மென் மேலும் செயற்கரிய செயல்கள் புரிந்து சிகரங்கள் தொட வாழ்த்துகள் மேடம்!