ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் பிறந்த நாள்

இந்திய அணுவியல் துறையின் தந்தையாக விளங்கிய ஹோமி ஜஹாங்கீர் பாபா 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு மேற்படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 1934 ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இவர் நீல்ஸ் போருடன் இணைந்து குவாண்டம் கோட்பாடு ஆராய்ச்சியும், வால்டர் ஹைட்லருடன் இணைந்து காஸ்மிக் கதிர்கள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.

இவருக்கு 1954 ஆம் ஆண்டு பாரதத்தின் உயர் விருதான பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. இவரது அரிய தொண்டு என்றென்றும் நினைவுக்கூறப்பட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் மும்பை அணுசக்தி ஆராய்ச்சி மையம், 1967 ஆம் ஆண்டு முதல் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் (Bhabha Atomic Research Centre) எனப் பெயரிடப்பட்டது.

அணுசக்தி ஆணையம், அணுசக்தி துறை ஆகியவற்றை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். இதன் காரணமாக இந்தியாவின் முதல் அணு உலை, 1956 ஆம் ஆண்டு மும்பை அருகில் உள்ள டிராம்பேயில் செயல்படத் தொடங்கியது. இது ஆசியாவின் முதல் அணு உலை என்ற பெருமையும் பெற்றுள்ளது. ஹோமி ஜஹாங்கீர் பாபா 1966 ஆம் ஆண்டு மறைந்தார்.