வண்ணக் கனவு பலிக்குமா?

அடுத்த ஆண்டு தமிழகசட்டசபைக்கான தேர்தல் வரஉள்ளது. ஆக, இது தேர்தல் மேகங்கள் மெல்லசூழஆரம்பித்துள்ள நேரம்.தற்போது அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களது தேர்தல் நடவடிக்கைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடங்கி இருக்கின்றன. பெரியகட்சிகள்கூட்டணிகளை உருவாக்குவதிலும், சிறியகட்சிகள் எந்த கூட்டணியில் நீடிப்பது அல்லது சேருவது என்றும் பணியாற்றத்தொடங்கி இருக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கும்.இங்கு தேர்தல் என்பதே எப்போதும் ஒரு திருவிழாதான். திருவிழா என்றாலே கலைநிகழ்ச்சிகள், ஆடல், பாடல் என்று கலகலப்பாக இருப்பதைப் போலவே இந்ததேர்தல் திருவிழாவிலும் எதுவும் குறையின்றி நடந்து முடியும். மக்கள் பிரச்னைகள் முக்கியமாக பேசப்பட்டாலும் கலகலப்பைத்தரும் மற்ற அம்சங்கள் தான் பலராலும் கவனிக்கப்படும். குறிப்பாக, கட்சிகளுக்குள் ஏற்படும் கூட்டணி மாற்றங்கள், புதிய வரவுகள், கட்சி தாவும் சாமர்த்தியசாலிகள், சில நேரங்களில் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் என்று வண்ணமயமாக தேர்தல் நிகழ்வுகள் இருக்கும்.

குறிப்பாக,தமிழகத் தேர்தல்களத்தில் பெரியகட்சிகளான திமுகவும், அதிமுகவும் ஆதிக்கம் செலுத்துவதும், அவை மக்கள் கவனத்தைக் கவருவதும் வழக்கம். அதிலும்,சட்டசபைத் தேர்தல் என்றால் இவர்களின் கூட்டணிகளை விட்டால் ஆள் இல்லை எனும் நிலைதான்.ஆனால் இந்த முறை தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி சலசலப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பலவகையிலும் அது மக்களின் கவனத்தை கவருவதற்கு முயற்சி செய்து வருகிறது. அதில் தவறேதும் இல்லை. இந்தியாவில் பல மாநிலங்களில் அது வலுவாக இருக்கும்போது தமிழகத்திலும் வளர வேண்டும் என்பதற்காக செயல்படுவதற்கு எல்லா அடிப்படை நியாயங்களும் உண்டு.

அந்தவகையில் அவர்களின் மாநிலகூட்டணிக் கட்சியான அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்துக் கூறி அது ஒரு சர்ச்சையாக உருவாகி, பிறகு அடங்கியது. இப்போது புதிய வரவாக நடிகை குஷ்பு பாரதிய ஜனதாவில் இணைந்திருப்பது ஒரு பேசுபடுபொருளாக மாறி இருக்கிறது. தமிழகத்தில் திரைப்படத்துறை சார்ந்த, குறிப்பாக நடிகர், நடிகையர் அரசியல் கட்சியில் இணைவது ஒரு சாதாரண நிகழ்வு என்றாலும் குஷ்புவின் என்ட்ரி பேசுபடு பொருளானதற்கு காரணம், அவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையைப்போல புதிதாக அரசியலுக்கு வரவில்லை. ஏற்கெனவே திமுகவிலும், அத்துடன், தேசியக் கட்சியான காங்கிரஸ் கட்சியிலும் இருந்தவர். இவ்வாறு குஷ்பு தமிழகத்தின் மூலைமுடுக்கில் உள்ள மக்கள் அனைவருக்கும் அறிமுகமான, நன்கு பழகிய முகம்.

அந்தவகையில் தமிழகத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியும் தேர்தல் கணக்குகளை வண்ணக்கனவுகளுடன் தொடங்கி இருக்கிறது என்பது உறுதியாகிறது. இந்த முறை தமிழக சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று பேசுவதை, செயல்படுத்திக் காட்டுவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்வதற்கான தயாரிப்புதான் இது என்றும் புரிகிறது. ஆனால் அதற்கு குஷ்பு போன்றவர்கள் வருகை பயன்படுமா என்பதைமக்களும், காலமும்தான் தீர்மானிப்பார்கள்.

எம்ஜிஆரைத் தாண்டி, தமிழகஅரசியலில் தனித்து நின்று வெற்றிகண்ட நடிகர் என்று இதுவரை யாரையும் பெரிய அளவில் சொல்லிவிட முடியாது. அதைப்போலவே நட்சத்திரப் பட்டாளங்கள் பிரச்சாரம் செய்ததாலேயே கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன என்றும் சொல்வதற்கு இல்லை. திருவிழாவில் வாண வேடிக்கைபோல மக்களின் கவனத்தைக் கவருவதற்கு வேண்டுமானால் அது பயன்படுமே தவிர கொள்கை அளவிலும், களத்திலும் எவ்வளவு செல்லுபடியாகும் என்றுஉறுதியாகக் கூறஇயலாது. அதிலும் பாரதியஜனதா கட்சிநாடளவில் பல செயல்திட்டங்களை செய்வதாக வாக்குறுதி கொடுத்து அதற்காக பல வகையிலும் செயல்பட்டு வரும் ஒரு கட்சி.

தமிழகத்தில் மக்களைக் கவர குஷ்பு போன்றவர்கள் கட்சிக்குத் தேவை என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருப்பது அதன் அரசியல் எதிர்பார்ப்புகளை கோடிட்டு காட்டுகிறது. அதைப்போலவே குஷ்பு போன்றவர்கள் தங்கள் வளர்ச்சிக்காக எந்த அரசியல் மேடையைப் பயன்படுத்திக் கொள்ளவும் உரிமை உண்டு.

இவைஎவ்வாறு இருந்தாலும், ஜனநாயகத்தில் மக்கள்தான் இறுதி எஜமானர்கள். அதிலும் இந்த முறை தமிழகத்தேர்தல் களத்தில் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு ஜாம்பவான்கள் இல்லை. கூடவேசினிமா என்ற பெரியதிரையைப் பார்த்து வளர்ந்த தலைமுறையோடு, சின்னத்திரைகளான தொலைக்காட்சியும், செல்போனும் பார்த்து வளரும் இளையதலைமுறையும் பெரும்பான்மையாக இணைந்திருக்கிறது.

காலம் காத்திருக்கிறது, களமும் காத்திருக்கிறது, நிழலின் தாக்கம் நிஜத்தில் எதிரொலிக்கிறதா என்பதைக் காண நாமும் காத்திருப்போம்!