இந்துஸ்தான் கல்லூரியில் தமிழ்த்துறை கருத்தரங்கு

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மற்றும் வள்ளுவர் வள்ளலார் வட்டம் இணைந்து நடத்திய இணையத்தில் தமிழ் மின்னாக்கம் (ஓலைச்சுவடி முதல் விக்கிபீடியா வரை) என்ற பொருண்மையில் மூன்று நாட்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் இணையம் வாயிலாக செப்டம்பர் 15 முதல் 17 வரை நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்திற்கு இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், மற்றும் செயலர் பிரியா சதீஷ்பிரபு  தலைமை வகித்தனர். மொழி துறைத் தலைவர் ரமேஷ்குமார் விழாவின் துவக்க உரையை வழங்கினார். முதல் நாள் அமர்வில் வள்ளுவர் வள்ளலார் வட்டம் ஒருங்கிணைப்பாளர் நார்வே நாட்டு பொறியாளர் இங்கர்சால் ‘மின்னாக்கமும் மொழியின் மேம்பாடும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இரண்டாம் நாள் அமர்வில் ‘இணையத் ‘தமிழ் விக்கிப்பீடியாவின் பங்கு’ எனும் தலைப்பில் தமிழின் முதல் பிழை திருத்தியான வாணி மென்பொருளை வடிவமைத்த நீச்சல்காரன் உரையாற்றினார். மூன்றாம் நாள் அமர்வில் ‘விக்கிமீடியாவின் பங்களிப்பாளரும் விக்கித் திட்டங்களின் நிர்வாகி மற்றும் திட்ட அதிகாரியுமான தகவலுழவன் ‘விக்கிமீடியாத் திட்டங்களில் பயன்பாடுகள்’ எனும் தலைப்பில் பல்வேறு கருத்துக்களை வழங்கினார்.

மொழித் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பன்னாட்டுக் கருத்தரங்கை, உதவிப் பேராசிரியர் கார்த்திக் சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தார். துறையையும் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் அவர்களையும் கல்லூரி நிர்வாகத்தினரும் முதன்மைச் செயலர் கருணாகரன் முதல்வரும் பாராட்டி சிறப்பித்தனர்.நன்றியுரையைக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் வழங்கினார். நிகழ்வின் இறுதியில் பங்கேற்பாளர்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கனடா, நார்வே, ஜெர்மனி, அயர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று தமிழ் விக்கிபீடியா மின்னாக்கம் குறித்து அறிந்து பயன் பெற்றனர்.