ஐந்து மணி நேரம் நாட்டுப்புற பாடல் பாடி உலக சாதனை

கோவையை சேர்ந்த கிராமிய புதல்வன் கலை குழுவை சேர்ந்த மாணவர்கள் இருவர் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களை தொடர்ந்து ஐந்து மணி நேரம் பாடியும், கூடுதலாக பத்து நிமிடம் தவில் வாசித்தும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

கோவை சேரன் மாநகர் பகுதியில் உள்ள கிராமிய புதல்வன் கிராமிய கலை குழுவை நடத்தி வரும் கலையரசன் கிராமிய கலையை இன்றைய தலைமுறை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் குழுவை நடத்தி வருகிறார். இந்த கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உலக சாதனை செய்ய ஊக்குவித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது குழுவை சேர்ந்த மாணவர்கள் தினம் ஒரு சாதனை எனும் முயற்சியாக கிராமிய இசை கருவிகளை தொடர்ந்து பல மணி நேரம் வாசித்து சாதனை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் புதுக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவரான மணிகண்டன் என்ற கலைமணி நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களை தொடர்ந்து ஐந்து மணி நேரம் பாடி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இவருடன் இணைந்து இதே குழுவை சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவன் ஐந்து மணி பத்து நிமிடம் தவில் வாசித்து சாதனை செய்துள்ளார். ஏற்கனவே ஐந்து மணி நேர தவில் வாசித்த சாதனையை முறியடிக்கும் வகையில் இதனை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டுப்புற கலையை மீட்கும் வகையில் இக்குழு செய்துவரும் சாதனை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.