மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியிட்டால் தயாரிப்பாளர்கள் நட்டமடைவார்கள்

கொரோனா பாதிப்பின் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. ஆறு மாதத்துக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் 15-ம் தேதி திரையரங்குகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் திரையரங்குகளைத் திறப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. அதனையடுத்து, தமிழகத்தில் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளிக்கவேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்களும், திரைபடத்துறையினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துவந்தன. அதனையடுத்து, மத்திய அரசின் வழிகாட்டுதலை அடுத்து தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து அக்டோபர் 20ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறது தமிழக அரசு. திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதன் காரணமாக, மாஸ்டர், ஜகமே தந்திரம் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாமல் முடங்கியுள்ளன.

கொரோனா தொற்றின் காரணமாக 50% மக்கள் மட்டுமே திரையரங்கினுள் அனுமதிக்கப்பட வேண்டும், கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும், மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.

இப்படியான விதிமுறைகளை பின்பற்றி மாஸ்டர் மாதிரியான பெரிய பட்ஜெட் படங்களை திரையிட்டால் தயாரிப்பாளர்கள் நட்டமடைவார்கள் என தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார். தற்போது நிலவும் சூழலில் சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட்டால் மட்டுமே சிறிதளவு லாபம் ஈட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.