குடிமைப் பணிக்கான முதுநிலைத் தேர்வில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வருகின்ற ஞாயிறு அன்று குடிமைப் பணிக்கான முதுநிலைத் தேர்வு கோவை மாவட்டத்தில் 21 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

இத்தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள் அவர்களின் தலைமையில் ஏழு உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள் துணை ஆட்சியர் நிலையிலும், 21 தேர்வு மையங்களுக்கும் தலா ஒரு தேர்வு மைய ஆய்வு அலுவலர் வட்டாட்சியர் நிலையிலும், 32 தேர்வு மைய துணை கண்காணிப்பாளர்கள் துணை வட்டாட்சியர் நிலையிலும், 746 அறை கண்காணிப்பாளர்களும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மேற்படி தேர்வு நடத்தப்படுவதனை பார்வையிடும் பொருட்டு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் வெங்கடேஷ், கோ.ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனர், சென்னை லால்வேனா, சமூகப்பாதுகாப்பு ஆணையர், சென்னை ஆகியோர் தேர்வு பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டு தேர்வு நடைபெறும் நாளுக்கு முன்னர் வருகை தரவுள்ளனர்.

மேலும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலிருந்து ரீட்டா பட்லா, தனி செயலர் தேர்வு செயல்பாடுகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல் துறையினரால் தேர்வு மையங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையங்களிலும் செல்போன் ஜாமர்கள் நிறுவப்பட்டுள்ளன. தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு மின்வாரியதால் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களுக்கு போதுமான அளவில் உக்கடம், கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர், பொள்ளாச்சி போன்ற புறநகர் பேருந்து நிலையங்களிருந்தும் வெளி மாநில மற்றும் மாவட்ட தேர்வுகளுக்கும் பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் :

இத்தேர்வு எழுதும் தேர்வர்கள் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டுடன் தேர்வு கூடத்திற்கு முற்பகல் தேர்விற்கு காலையில் 9.20 மணிக்கு முன்பாகவும், பிற்பகல் தேர்வுக்கு 2.20 மணிக்கு முன்பாகவும் வளாகத்திற்குள் வந்துவிட வேண்டும்.

அதன் பின்னர் கதவு பூட்டப்படும் மேலும் தேர்வர்கள் தேர்வு தொடர்பான அறிவுரைகளை பெரும் வகையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வந்துவிட வேண்டும். தேர்வு வளாகத்திற்குள் செல்போன், கைக்கடிகாரம், உள்ளட்டவை மின்னியக்க கருவிகள் எதையும் எடுத்து வர வேண்டாம். இத்தேர்வர்கள் கருப்பு பால் பாய்ண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேலும் தேர்வர்கள் UPSC இணையதளம் வழியே பதிவிறக்கம் செய்யப்பட்ட e-Admit card நுழைவு சீட்டில் உள்ள தேர்வரின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் தெளிவின்மை காணப்படின் தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒன்றையும் உடன் எடுத்து வரவும் என தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், தேர்வு மையங்களில் தேர்வர்கள் கொரோனா தொடர்பான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.