நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தப்பில்லை

பல வருடங்களாக தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர நடிகராக வலம் வந்து  கொண்டிருக்கும் நடிகர் மோகன்ராமன் நம்மிடம் பகிர்ந்து கொண்ட சில சுவாரசியமான தகவல்கள்.

‘‘நான் என் கல்லூரி படிப்பை முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு சொந்தமாக தொழில் செய்து கொண்டு இருந்த தருணத்தில், எனக்கு சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் நண்பர்களாக பழக்க மானார்கள், என் நண்பர்களுடன் சேர்ந்து பல குறும்படங்கள் எடுத்தோம். அதைப்  பார்த்த பிறகு சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்த ‘இதயம்’ படத்தில் முதன் முதலாக அறிமுகம் ஆனேன். அதற்கு பிறகு ராம்குமார், மனோபாலா, சந்தானபாரதி இன்னும் பல இயக்குநர்கள்  என்னை தங்கள் படங்களில் நடிக்க அழைத்தனர். அப்படியே என் சினிமா பயணம் தொடங்கிவிட்டது.

நடிப்பு ஒரு பக்கம் இருக்க, என் சினிமா தொழில் மிது எனக்கு ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு வரக் காரணமாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள். அவர் நடிப்பைப் பார்த்து பல தருணங்களில் வியப்பில் ஆழ்ந்தது உண்டு. ஒருநாள் அவர் தயாரிப்பில் உருவான ‘கலைஞன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் நடித்து முடித்தவுடன், படத்தைப் பார்த்த நடிகர் திலகம் என்னைப் பார்த்து, ‘என்னடா நடிக்கனும்னு ஆசையா’ன்னு கேட்டார்.

பிறகு, ‘நீ உன் தொழிலை விட்டுவிட்டு என் தொழிலைத் தேர்ந்தெடுத்து இருக்கிறாய். அதன் மிது மரியாதை  வைத்து உன் திறமையைக் காட்டு’ என்ற அவரது கருத்து என் மனதில் ஆழமாகப்பதிந்து விட்டது. அன்று முதல் இன்று வரை என் வாழ்வில்  அதைப்  பின்பற்றி வருகிறேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், ஒரு பெரியப்பா ஸ்தானத்தில் இருந்து என்னை வழிநடத்திச் சென்றவர். சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கும் தருணத்தில் எனக்கு சின்னத் திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, அதுவும் இயக்குநர் ஜாம்பவான் கே.பாலச்சந்தர் இயக்கும் தயாரிக்கும் நாடகத்தில். அதற்குப்  பிறகு என் நடிப்பைப் பார்த்து என் நடிப்பில் இருக்கும் சில நிறை குறைகளை எனக்கு சரி செய்து எனக்கு பல விஷயங்களைக்  கற்றுக் கொடுத்தவர் கே.பாலச்சந்தர் அவர்கள். அவரை சினிமாவில்  என்னுடைய முதல் குருநாதர் என்று ஆணித்தரமாகக்  கூறுவேன்.

இவர்களைத் தாண்டி இப்பொழுது இருக்கும் தமிழ் சினிமாவின் நிலைப்பாடை பற்றி வீட்டில் இருக்கும்போது நினைப்பது வழக்கம். 1949ல் ஸ்டூடியோ முதலாளிகள் கையில், சினிமா இருந்தது. அப்படியே நட்சத்திரங்கள், இயக்குநர்கள் என்று கை மாறி மாறி  இப் பொழுது விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க முதலாளிகள் தமிழ் சினிமாவைத்  தீர்மானிக்கும் சூழல் ஏற்பட்டுவிட்டது. இதனால் பல தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை நாம் முதலில் மாற்ற வேண்டும்.

சூப்பர் ஸ்டார் படம் வெளியானாலும் டிக்கெட் விலை 183 ரூபாய்தான். குறைந்த பட்ஜெட் படத்தின் டிக்கெட் விலையும் 183 ரூபாய்தான். ஆனால், எந்த படம் எந்த காட்சி ஓட வேண்டும் என்று தீர்மானித்து, இவர்கள் இதற்கு முட்டுக் கட்டை போடுவதால் பல பிரச்னைகள் உருவாகிறது. மற்ற மாநிலங்களில் திருட்டு விசிடி ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் நம் தமிழ் சினிமாவுக்கு மட்டும்  எமன்போல் நின்றுகொண்டு இருக்கிறது. இந்த திருட்டு விசிடி பிரச்னை, ஒரு திரைப்படத்தால் பல நிறுவனங்கள் நன்றாக சம்பாதிக்கும் சூழல் இருக்கிறது. திரையரங்கில் ஒரு பாப் கார்ன், கோகோ கோலா, வாட்டர் பாட்டில் விலை இரண்டு மடங்காக விற்கப்படுகிறது. படம் ஆரம்பிக்கும் முன்பு பல நிறுவனங்களின்  விளம்பரங் களைத் திரையிடுகின்றனர். இதில் வரும் வருவாயில் ஒரு பகுதிகூட படத்  தயாரிப்பாளர்களுக்கு போய் சேருவது கிடையாது.

இணையதளத்தில் வெளியாகும் படத்தை நாம் திருட்டுத்தனமாக எடுத்துப்  பார்க்கக் கூடாது என்று மக்கள் உணர வேண்டும். இலவசமாகக்  கிடைக்கும்போது அதை நான் பயன்படுத்திக் கொள்வேன் என்று மக்கள் விரும்புகிறார்கள். காரணம், எதற்கு எடுத்தாலும் இலவசம் என்று நமது மக்களை மாற்றி வைத்து இருக்கிறார்கள் நம் அரசியல்வாதிகள். இதனால் இலவசம் என் உரிமை என்று மக்கள் நினைத்துக்  கொண்டு இருக்கிறார்கள். இது அறவே ஒழிய வேண்டும் என்பது எனது கருத்து. சினிமா ஸ்டார்ஸ் அரசியலுக்கு வருவது தப்பு இல்லை. மக்களுக்கு தெரியும், யார் நல்லது செய்வார்கள் என்று. நல்ல கல்வி ஒரு மனிதனை உருவாக்கும். நல்ல தலைவன் இருந்தால் நாடும் நாட்டு மக்களும் செழுமை அடைவார்கள்’’

– பாண்டியராஜ்.