அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணைய வழிக் கலந்தாய்வு

கோவை மாவட்டத்திலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் இணையவழியில் கலந்தாய்வு நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2020ம் கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியில் சேருவதற்காக விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டன. மேற்படி கலந்தாய்வு இணையவழியில் நடைபெற உள்ளதால் முன்னுரிமை அல்லாத அனைத்து விண்ணப்பதாரர்களும், தங்களுக்கு விருப்பமான குறைந்தபட்சம் 5 முதல் 25 தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவுகள் வரை இணையவழியில் (www.skilltrainingtn.gov.in) 23.09.2020 முதல் 25.09.2020 வரை விண்ணப்பதாரர்களே தேர்வு செய்து கொள்ளலாம். அல்லது ஒரே தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தொழிற்பிரிவுகளையும் தேர்வு செய்யலாம்.

மேலும், மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் மட்டுமே, தாங்கள் தேர்வு செய்த தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவுகளை மாற்றம் செய்து கொள்ள முடியும். அதன்பின்னர் விண்ணப்பதாரர்களின் தரவரிசை, இனசுழற்சி முறை மற்றும் அவர்கள் கலந்தாய்வில் தேர்வு செய்த 25 தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவுகள் போன்றவற்றின் அடிப்படையில் கணினி மென்பொருள் மூலம் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவு உறுதி செய்யப்பட்டு தற்காலிக சேர்க்கை ஆணை 26.09.2020 அன்று இணையவழியில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்தார்.