முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்

கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுப்பதற்காக கோவை மாநகராட்சி தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் மற்றும் அன்றாடம் மாநகருக்குள் வந்து செல்லும் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் மீறினால் விதிக்கப்படும் அபராத தொகையும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.

ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது. எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

மேலும் சலூன் கடைகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், காய்கறி விற்பனைக் கூடங்கள், நகை மற்றும் துணிக்கடைகள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட வியாபார நிறுவனங்கள் மற்றும் இதர பொது இடங்களிலும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

மேற்கண்ட நடைமுறைகளை கடைபிடிக்காத வியாபார நிறுவனங்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.