சாடிவயல் கும்கி யானைகள் டாப் சிலிப் முகாமிற்கு பணி மாற்றம்

கோவை சாடிவயல் யானை முகாமில் இருந்த வெங்கடேசன், சுயம்பு யானைகள் ஓராண்டு பணிக்கு பின் மீண்டும் டாப் சிலிப் முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளது.

கோவை வனக்கோட்டத்தில் மனித விலங்கு மோதல் மற்றும் ஊருக்குள் காட்டு யானைகளை வனப்பகுதிகளுக்குள் விரட்டியடிக்க கோவை சாடிவயல் பகுதியில் யானைகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த முகாமிற்கு முதுமலை மற்றும் டாப் சிலிப் யானை முகாமில் இருந்து பயிற்சி பெற்ற இரண்டு கும்கி யானைகள் பணிக்கு அழைத்து வரப்படும். ஓராண்டு மட்டுமே இங்கு பணியில் அமர்த்தப்படும் கும்கிகள் மீண்டும் பணி மாறுதல் செய்யப்படும்.

அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டில் டாப் சிலிப் முகாமில் இருந்து வெங்கடேசன் மற்றும் சுயம்பு சாடிவயல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டது. ஓராண்டாக இங்கு இருந்த கும்கியானை சுயம்பு, இதே கோவை தடாகம் அருகே அட்டகாசம் செய்ததால் 8 வயதாக இருந்த போது பிடிக்கப்பட்டது, 12 ஆண்டு பயிற்சிக்கு பின் கும்கியாக வந்துள்ளது.

அதே போல் வெங்கடேசன் கும்கி யானை சாடிவயல் முகாமிற்கு வந்த சிறிது நாட்களிலேயே சங்கிலி கழட்டி  விட்டு வனப்பகுதிக்குள் மாயமாகி பரபரப்பை கிளப்பியது. ஓராண்டு நிறைவான நிலையில் தற்போது இரண்டும் கும்கிகளும் டாப் ஸ்லிப் முகாமிற்கு அனுப்பப்படுகிறது.

சாடிவயல் முகாமிலுள்ள பாகன் கூறும்போது, கடந்த ஓராண்டுக்கு முன்பு சுயம்பு வெங்கடேசன் கும்கி யானைகள் சாடிவயல் முகாமிற்கு வந்தோம், இங்கு இருக்கக்கூடிய வனத்துறை அதிகாரிகள் கும்கி யானைகளை மிகவும் பக்குவமாக பார்த்துக்கொண்டனர். யானைகளுக்கு ஏதேனும் பிரச்சனை என தெரிவித்தால் உடனடியாக கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளிப்பார்கள்.

சாடிவயல் முகாமிற்கு வந்ததற்கு பின்பு காட்டு யானைகளை விரட்டும் எந்த ஒரு ஆப்பரேஷன் நடக்கவில்லை.  இறுதியாக மேட்டுப்பாளையத்தில் காயத்துடன் இருந்த  காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க இரண்டு கும்கியுடன் சென்றோம். ஆனால் அந்த யானையும் இறந்ததால் அங்கும் யானையை பிடிக்கும் பணிகள் நடக்கவில்லை.

இதையடுத்து மீண்டும் சாடிவயல் முகாமுக்கே வந்துள்ளோம் ஓராண்டு பணி நிறைவடைந்து இன்று மீண்டும் டாப்ஸ்லிப் செல்ல உள்ளோம் என தெரிவித்தார். அடுத்தாக அரிசி ராஜா மற்றும் சின்னதம்பி யானைகள் கோவைக்கு கும்கியாக வர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.