விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும்

– மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கடைகள், மீன், கோழி கடைகள் மற்றும் வணிக வளாகங்கள், ஷோரூம்கள், (நகை, ஜவுளி) காய்கறி விற்பனைக் கடைகள், மார்க்கெட்டுகள் மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க பொது மக்கள் தங்களையும் , குடும்பத்தையும் மற்றும் சமூகத்தையும் பாதுகாத்திட சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்காத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் நோய் பரவலைத் தடுக்கும் வண்ணம் இறைச்சிக் கடைகள், மீன், கோழி கடைகள் மற்றும் வணிக வளாகங்கள், ஷோரூம்கள், ( நகை, ஜவுளி ), காய்கறி விற்பனைக் கடைகள், மார்க்கெட்டுகள் மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மீன் கடை, இறைச்சிக் கடைகளில் 2 மீட்டர் இடைவெளியுடன் கூடிய அடையாள வட்டம் இடப்பட்டிருக்க வேண்டும் .

இவற்றை பின்பற்றாத கடைகளுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இவ்வாறு பின்பற்றாத கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்படும். மேலும், கடை உரிமையாளர்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்க வேண்டும். இவற்றை கடைபிடிக்காத வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கப்படாது என்பதை கடை உரிமையாளர் எடுத்துரைக்க வேண்டும். கொரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக திகழ்ந்திட அனைவரும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முழு ஒத்துழைப்பு தந்து நல்கிடுமாறு மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.