கே.பி.ஆர்.கலை கல்லூரியின் பைந்தமிழ் மன்றம் நல் இறைச்சிந்தனை நிகழ்வு

கோவை கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் பைந்தமிழ் மன்றம் நடத்திய நல் இறைச்சிந்தனை நிகழ்வு இணைய வழியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த்துறைப் பேராசிரியர் முத்துக்குமாரவடிவேல் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமையேற்றுக் கொண்டார். “தேடலும் தெளிதலும்” எனும் மனித வளம் அமைப்பின் இயக்குநர், பாரதிச்சுடர் மகேஸ்வரி சற்குரு, கலந்துகொண்டு பேசுகையில், பக்தி என்பது அன்பின் வெளிப்பாடு அவ்வன்பு பரிபூரணமடைகின்ற போதுதான் பக்தி முழுமையடையும் என்றார். பக்தியால் பிணைந்த உறவுகளாக, சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ணபரமஹம்சரின் குரு சீடன் உறவினைக் குறிப்பிட்டு குரு வழங்கிய தீட்கை முறையினை விரிவாக எடுத்துரைத்தார். பின்னர், பாஸ்கரசேதுபதி சுவாமி விவேகானந்தர் மீது வைத்திருந்த பக்தியினையும் கூறினார்.

பக்தியின் ஒன்பது படிநிலைகளைக் எடுத்துக்கூறி அந்நிலையில் மாணவர்களை வழிநடத்த நெறிவகுத்துக் கொடுத்தார். மேலும், இரணியன், பக்தபிரகலாதன் கதையைக் கூறி,இறைவன் எங்கும் நிறைந்திருக்கும் தன்மையை தனதுரையின் மூலம் எடுத்துரைத்தார். ஆண்டாள் நாச்சியாரை நினைவுகூர்ந்தவர், அவர் அருளிய அருள் நூல்களையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ம.தமிழரசன் அவர்கள் நன்றிகூற நிகழ்வு இனிதே நிறைவடைந்தது. தமிழ்த்துறைப் பேராசிரியர் திரு.ப.கோகுல்நாத் அவர்கள் தொகுத்து வழங்கிய இந்நிகழ்வில் முதன்மையர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் என 110-க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.