கோவையில் இன்று 549 பேருக்கு தொற்று உறுதி

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை 400 முதல் 500 வரை இருந்தது. இந்நிலையில் இன்று (16.9.2020) மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 500ஐ கடந்துள்ளது.

இதில் பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பை சேர்ந்த 36 வயது ஆண் காவலர், கோவை அரசு மருத்துவமனையை சேர்ந்த 26 வயது ஆண், 25 வயது பெண் பயிற்சி மருத்துவர்கள் ஆகியோருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர செல்வபுரத்தில் 59 பேர், பீளமேடு, பி.என்.பாளையத்தில் தலா 10 பேர், வெள்ளக்கிணரில் 22 பேர், மேட்டுப்பாளையத்தில் 29 பேர், காரமடையில் தலா 15 பேர், ராமநாதபுரம், துடியலூரில் தலா 16 பேர், சிங்காநல்லூர், சூலூர், கணபதியில் 14 பேர், காந்திபுரத்தில் 13 பேர், உள்பட 549 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 702 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தார் மற்றும் உயிரிழந்தோரின் விவரம்

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 707 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரத்து 900 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 3 ஆயிரத்து 437 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 84, 86 வயது முதியவர்கள், 47 வயது ஆண், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 63 வயது முதியவர் ஆகிய 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது.