கோவையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 756 ஆக உயர்ந்துள்ளது

கோவையில் இன்று 498 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சிங்காநல்லூரில் மட்டும் 40 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

அதன்படி, கோவையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 662ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கோவையில் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரமேஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து அவர் வீட்டிலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையில் உள்ளார்.

மேலும், பீளமேடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் 33 காவலர், நியூ காவலர் குடியிருப்பில் வசித்து வரும் 43 வயது காவலர் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, திருச்சி சாலை தனியார் வங்கி ஊழியர், கோவை அரசு மருத்துவமனை கேண்டீனில் பணியாற்றி வரும் இளைஞர் உள்ளிட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது.

மேலும், சிங்காநல்லூர் பகுதியில் மட்டும் 40 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்கள் தவிர ஆர்.ஜி.புதூர் பகுதியைச் சேர்ந்த 14 பேருக்கும், ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 15 பேருக்கும், பீளமேடு, ராமநாதபுரம், காந்திமாநகர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர், குனியமுத்தூர், மதுக்கரை உள்பட பகுதிகளை சேர்ந்த 498 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது.

இதுபோக கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 83 வயது முதியவர், 57 வயது ஆண், 42 வயது பெண் ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக அதிகரித்துள்ளது.

கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 448 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 18 ஆயிரத்து 756 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 549 பேர் சிகிச்சையில் உள்ளனர்.