நலமாய் வாழ 3 வழிகள்!

நம் வாழ்வை முழுமையாக மாற்றிய மைத்துக்கொள்ள, மூன்று எளிய செயல் முறைகளை இங்கு நமக்கு வழங்குகிறார் சத்குரு. இதை செயல்படுத்திக் கொள்ள நமக்கு சில கணங்களே போதுமானது என்றாலும், அதன் தாக்கம்மிக ஆழமாக இருக்கும்.

சத்குரு:

உங்கள் வாழ்வில் எது நடந்தாலும் சரி, தினசரி உங்கள் நாள் முடியும் போது, அன்று நீங்கள் செய்த முட்டாள் தனங்களை நினைத்துச் சிரித்திடுங்கள். அடுத்தவர் செய்தவற்றைப் பார்த்து சிரிப்பதில்லை, உங்களைப் பார்த்து, நீங்கள் செய்ததை நினைத்தே சிரித்திடுங்கள். நீங்கள் காலையில் எழுந்ததிலிருந்து, இரவு உறங்கச் செல்லும் வரை என்னென்ன செய்தீர்கள், எப்படியெல்லாம் நடந்து கொண்டீர்கள் என்று சற்றே கவனித்துப்பாருங்கள். குறைந்தது 90% நேரமாவது நீங்கள் முட்டாள்தனமாக செயல்பட்டிருப்பது உங்களுக்கே புரிந்திடும்.

நீங்கள் கவனிப்பதற்கான மூன்று குறிப்புகள்:

1.உங்கள் கைகளில் புதிதாக ஒரு பொறுப்பு வழங்கப்படும் போது, திடீரென உங்களுக்குள் பெருமிதமும், கர்வமும், மிகப்பெரிய மனிதராகி விட்டது போன்ற ஒரு மிதப்பும் ஏற்பட்டிருக்கும் இல்லையா? இதனால், எத்தனை முறை இந்தப் பிரபஞ்சத்தைவிட நீங்கள் பெரிய மனிதர் ஆகியிருக்கிறீர்கள்! பெரும் பாலான சமயங்களில் பெருமிதத்தால் வெடித்திடும் அளவிற்கு நீங்கள் ஊதிப்போய் இருக்கிறீர்கள்தானே? அதைப்பாருங்கள்.

2.‘மரணம்’ என்பது உங்களுக்கும் உண்டு என்பதையே நீங்கள் மறந்துவிட்ட தருணங்கள் தான் எத்தனை எத்தனை! எத்தனை முறை “எனக்கு அழிவேயில்லை” என்பது போல் கர்வத்துடன், அடுத்த வரை அடக்கி ஆளும் வகையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள் எனப்பாருங்கள்.

3.உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களையும், பிறவற்றையும் எத்தனை முறை ஈடுபாடே இல்லாமல் பார்த்திருக்கிறீர்கள் எனப்பாருங்கள்.

இதையெல்லாம் நீங்கள் செய்யும் போது நீங்கள் கவனித்து இருக்கமாட்டீர்கள். ஆனால், இரவு சூழ்நிலைகளின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு, சற்றேத் தளர்வாய் இருக்கும் போது அன்று நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.

ஒரு திரைப்படத்தில் வடிக்கப்படும் பல கறார் கதாபாத்திரங்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்து நீங்கள் சிரித்தது போல், ‘என்ன முட்டாள்தனம் இது’ என்று நீங்கள் உச்சுக் கொட்டுவது போலே, நீங்களும் நடந்து கொண்டது உங்களுக்கே புலப்படும்.

இந்த மூன்று குறிப்புகளையும் நீங்கள் கவனித்தாலே, நீங்கள் இரவெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்கத்தேவையிருக்கும். உங்கள் முட்டாள் தனத்தை எண்ணி அழவேண்டாம், அதனை நினைத்து சிரிக்கக்கற்றுக் கொண்டுவிட்டால், நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் அத்தனைக் குப்பைகளும் மக்கி, உங்கள் வளர்ச்சிக்கு எருவாக மாறு வதை நீங்கள் கவனிக்கலாம்.