ஜென்டில்மேன் 2 : தயாரிப்பாளர் குஞ்சுமோனின் திடீர் அறிவிப்பு!

தமிழ் திரையுலகில் பிரம்மாண்டத்திற்கு பேர்போன இயக்குநர் சங்கரின் முதல் படம் ஜென்டில்மேன். இந்த படத்தில் அர்ஜூன், கவுண்டமணி, மதுபாலா, மனோரம்மா உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். 1993ஆம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்களும் மக்களிடையே பெரிய வரவேற்ப்பை பெற்று தந்தது.

இப்படத்தை தயாரித்தவர் கே.டி. குஞ்சுமோன், பல வெற்றி படங்களை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்தவர் தற்போது சினிமா துறையில் எந்த படங்களையும் தயாரிக்காமல் ஒதுங்கியிருக்கிறார். இந்நிலையில் அவர் ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “‘ஜென்டில்மேன்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி மெகா ஹிட்டானது. ‘ஜென்டில்மேன்’ படத்தை விட இரண்டு மடங்கு பிரம்மாண்டத்தை ‘ஜென்டில்மேன் 2’ ல் காணலாம். நவீன தொழில்நுட்பத்தில், ஹாலிவுட் படங்களின் தரத்தில், மெகா பட்ஜெட்டில் ‘ஜென்டில்மேன் 2’ உருவாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஜென்டில்மேன் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் இந்த படம் தயாராகவுள்ளது. நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ‘ஜென்டில்மேன் 2’ பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். உலகம் முழுவதும் முதலில் திரையரங்குகளில் வெளியான பிறகுதான் மற்ற ஊடகங்களில் வெளியிடப்படும்” என்றார்.