மெர்சல் அரசியல்

படத்தில் வருவது வெறும் வசனங்கள்தான் என்பது மக்களுக்குத் தெரியும்’ என மெர்சல் படத்தைத் தடை செய்ய வேண்டி தொடரப்பட்ட பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது நீதிமன்றம். படத்தைப் பார்க்காமல் வெறுமனே வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் மேயவிடப்படும் கருத்துக்களை வெறுமனே படித்துக் கொண்டிருந்தால் கட்டாயம் பித்துபிடித்துவிடும்.

நடிகர் விஜயை ‘ஜோசப் விஜய்’ என்பதும், அவரது மதப் பின்புலங்களை ஆராய்வதும், கோயில், மசூதி, இந்து, முகலாயர்கள் மற்றும் கிறிஸ்துவம்  குறித்து பேசுவதும், படத்தின் காட்சிகளை, வசனங்களை நீக்க  சொல்வதும், இந்திய இறையாண்மைக்கு எதிரான படம் என்பதும் ‘‘ஏன்? இந்தப் படத்தில் மட்டும்தான் இதுபோன்ற கருத்துக்கள் பேசப்பட்டனவா? இதற்கு முன்னர் வெளிவந்த திரைப்படங்களில் இதுபோன்ற கருத்துக்கள் இல்லையா? அந்த நடிகர்கள் மீது இவ்வளவு தாக்குதல்கள் இல்லையே, அது ஏன்?’’ என்பன போன்ற அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது. அத்துடன், இவை யாவும் அறியாமையில் விளைந்த தனிமனித தாக்குதல்கள் என்பதும் நிதர்சனமாகிறது.

பொதுவாக, சமீபகாலங்களில் திரைத்துறை மீதான மத, ஜாதி, பிற சங்கங்களின் தாக்குதல்கள் அதிகமாகவே உள்ளன. மற்ற தொழில்களைப் போலவே திரைத்தொழிலும் ஒன்று. இதுவும் ஒரு வியாபாரமே. ஆனால் ஒரு வித்தியாசம், இங்கே பணம் சார்ந்த இலாபத்தையும் தாண்டி, அரசியல் பதவிக்குண்டான அடித்தளமும் புகழும் கூடுதல் போனஸ். ஏனெனில், திரை மீதான கவர்ச்சி. பொழுதுபோக்கு சாதனத்தைப் பிழைப்பாக வைத்திருப்பவர்கள் போடும் மூலதனத்தை எவ்வாறு எடுப்பது என்று சிந்திப்பார்கள். தங்கள் பொழுதை கழிக்க செல்லும் மக்கள் அவர்களுக்கு தங்கள் மனதில் இடம்கொடுத்து விடுவார்கள். அதனால்தான் திரைத்துறையில் இருந்து பல அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் தோன்றியுள்ளனர். இதுவும் நிஜம் வேறு, நிழல் வேறு என்பதைக் குறித்த தெளிவில்லாத அறியாமையின் விளைவே.

இது இவ்வாறிருக்க, வேறு தொழிலின்றி அரசியலைத் தங்கள் பிழைப்பாக்கி, மத்திய, மாநில, மாவட்ட கட்சிகளில் இணைந்து, அதிலே தங்கள் வாழ்நாளை அடமானம் வைத்து வாழும் அரசியல் பிழைத்தோர், திரைத்துறை பிரபலங்களின் புகழைக் கண்டு அஞ்சுவதில் நியாயம் இருக்கிறது. அவ்வாறான அச்சத்தின் வெளிப்பாடுகளே இப்படத்திற்கு எதிரான ‘அரசியல்’.

குமரி செபஸ்டியன் அனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர். இவரது மகள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். ஒரு குடும்பத்தில் இரு மத்திய கட்சித் தலைவர்கள்! தந்தை நல்ல பேச்சாளர். மகளானவர், தான் சார்ந்த மத்திய பாஜக கட்சியைத் தமிழகத்தில் வேரூன்ற வைக்க தன்னால் முடிந்தமட்டும் போராடும் அரசியலாளர். இவரது கருத்துக்கள்தான் தமிழகத்தில் மெர்சலுக்கு நல்ல விளம்பரத்தையும், வியாபாரத்தையும் பெருவாரியாகத் தந்துள்ளது என்பதில் ஐயமில்லை. இவரது கருத்துக்கு எதிராகவும், நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் திமுக கட்சித்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக கட்சித் தலைவர்கள் குரல் கொடுக்கின்றனர். இன்னுமொரு பெரும் ஆச்சரியம், காங்கிரஸின் ராகுல்காந்தியின் ஆதரவு.

இவ்வளவும் ஏன்? தமிழகத்தைப் பொறுத்தவரை சொல்லிக்கொள்ளும்படியான மக்களின் பெருவாரியான ஆதரவு பெற்ற தலைவரோ, கட்சியோ கிடையாது. இருப்பவர்கள் இந்த வெற்றிடத்தைப் பிடித்துக்கொள்ள குடுடிப்பிடி சண்டைப்போட்டுக் கொள்கிறார்கள். இதில், திரைப்பிரபலங்களும் அடக்கம். ஆனால் அவர்கள் தங்களது வருமானம் பாதிக்கப்படுமோ என்ற பயத்தில் நேரடியாக களத்தில் இறங்கப் பயப்படுகின்றனர். ‘சினிமாதான் என் மூச்சு, அரசியல் எனக்குத் தெரியாது’ என்ற ‘முற்போக்கு’ நடிகர் கமல்ஹாசன், ‘தான் அரசியலுக்கு எப்போதோ வந்துவிட்டேன்’ என்றார். தற்போது ‘நவம்பர் 7 இல் கட்சி அறிவிப்பு இல்லை’ என்கிறார். ‘போர் வரட்டும், சிஸ்டம் சரியில்லை’ என்றார் நடிகர் ரஜினிகாந்த். அதுபோல், நடிகர் விஜயும் தனது அரசியல் பிரவேசம் குறித்து இரசிகர்களிடையே பேசியுள்ளார். இவர்களைத் தங்கள் அணிக்கு அழைக்க மத்திய, மாநிலக் கட்சிகள் பெரும் முயற்சிசெய்தன. ஆனால் இவர்களோ தங்கள் நிழல் பிம்பம், தங்களுக்கு பெருவாரியான வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையில் ‘தனிக்கட்சி’ என்பதை நேரடியாக, மறைமுகமாக சொல்லிவிட்டனர்.

ஆக, அரசியல் வியாபாரத்தில் கூட்டணி வியாபாரம் பொய்த்துப்போனதால் இவர்களின் படங்களுக்கு தங்களால் ஆன தடைகளைச் செய்கின்றனர் அரசியல் பிழைத்தோர். அதுவே இப்படத்திற்கு எதிரான தற்போதைய கடும் விமர்சனங்கள். ‘பிடித்திருந்தால் படத்தைப் பாருங்கள். இல்லையென்றால் பார்க்காதீர்கள்’ என்று நீதிமன்றமே கூறிவிட்டது. இவர்களுக்குத்தான் இரத்தம் கொதிக்கிறது.

சரி, படத்தில் அப்படியென்ன இருக்கிறது?! ஒருமுறை பார்க்கலாம் இரகம்தான் ‘மெர்சல்’. ஆனால் இதனை ஒவ்வொருவரும் பார்க்க வைத்தது அரசியல் எதிர்ப்புகள். அந்த வகையில் விஜய் அனைவருக்கும் நன்றி தெரிவித்தது சாலச்சிறந்தது. ஆனால் அவர் நன்றி மட்டும் தெரிவிக்காமல், ‘படத்தில் பேசிய வசனங்கள் எனக்கும் ஏற்புடையதுதான். அதை நான் ஆமோதிக்கிறேன்’ என்று சொல்லியிருந்தால் தமிழகத்தில் அவர் ஒரு சிறந்த தலைவர் ஆகியிருக்கலாம். அதைவிடுத்து தனக்கும் படத்தில் பேசிய வசனங்களுக்கும் சம்பந்தமில்லை. போட்ட மூலதனம் திரும்பிய மகிழ்ச்சியில் நன்றி தெரிவிப்பது அவர் ஒரு சாதாரண நடிகர்தான் என்பதையே காட்டுகிறது. ஆனால் இதை உணர்வதற்குண்டான அரசியல், சினிமாவைக் குறித்த அடிப்படை அறிவு இரசிகர்களுக்கு இல்லாமல் போனதுதான் பரிதாபம். அவர்கள் வழக்கம்போல் ‘தமிழனே, தலைவனே’ என்று போஸ்டர் அடித்தும், ‘தளபதிக்கு ஆதரவு’ என வாட்ஸ்அப் ஸ்டேடஸ் வைத்துக்கொண்டும் சுற்றுகிறார்கள். அய்யோ பாவம், தமிழன்.

அருண்குமார் என்கிற ‘அட்லி’ இதுவரை இயக்கிய படங்களின் ஒருவரிக் கதை, மௌனராகம் (ராஜா ராணி), சத்ரியன் (தெறி), மூன்று முகம், அபூர்வ சகோதரர்கள் (மெர்சல்). ஆனால் தனது திரைக்கதையில் அண்மைக்கால காட்சிகளையும், இளைய சமுதாயத்தைக் கவரும்படியான வசனங்களையும், இசையையும் அழகான தோரணமாக்கி வெற்றிப்பட இயக்குநராக வலம் வருகிறார். இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் சிஷ்யன் என்ற முறையில், சிவாஜி, முதல்வன், இந்தியன் திரைக்காட்சிகளுக்கு இணையாக (?!-) ‘மெர்சலை’ கொடுத்திருக்கிறார் அட்லி. இருப்பினும், தற்போதைய நாட்டின் நிலையை, மக்களின் துயரத்தை, காட்டியதற்காக அவருக்கு ஒரு ‘ராயல் சல்யூட்’.

ஆட்சியாளர்கள் கொண்டுவரும் சட்டத்தை மக்களில் ஒருவனாக விமர்சிப்பதற்கு இயக்குநர்களுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையைத் தனது திரைத் திறமையால் மிகவும் சரியாக, அருமையாகப் பயன்படுத்தியிருக்கிறார் அட்லி. வில்லன் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் எஸ்.ஜே.சூர்யா, மருத்துவத் துறையில் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக வைத்திருக்கும் நபர்களின் எண்ண ஓட்டத்தை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். இவர் ஏற்ற ‘டேனியல்’ கதாபாத்திரத்தின் மூலம் பல மருத்துவத்துறை உண்மைகளை, அதிலும் ‘சிசேரியன்’ குறித்தும் ‘ஐந்து ரூபாய், ஐயாயிரம் ரூபாய் டாக்டர்கள்’ குறித்தும் ‘இப்படி வாழ்றதுதான் சிறந்த வாழ்க்கை என்று ஒவ்வொருவருக்கும் சொல்லப்படும். இப்படி வாழ்ந்ததால்தான் நாம் நோயாளிகளாக ஆனோம் என்ற உண்மை அவர்களுக்கு தாமாதமாகத்தான் புரியும்’ என்றும் வசனங்களில் சமூக உண்மைகளை எழுதியிருக்கிறார்கள் அட்லி மற்றும் ரமணகிரிவாசன். ‘தப்பு செய்பவர்களுக்கு கோபம் வரும்’ என்ற வரியின் பிரதிபலிப்பே நடப்பு அரசியல் விமர்சனங்கள். தவிர்க்க.

கோயில் கட்டவேண்டும் என்று ஒரு கிராமத் தலைவருக்குத் தோன்றும் வழக்கமான எண்ணத்தை, தீவிபத்தில் இறக்கும் இரு சிறுவர்களின் முடிவு மாற்றுகிறது. அதனால் மருத்துவமனை திறக்கும் அவரைக் கொல்லும் ஒரு டாக்டரை பழிவாங்க அவரது மகன்கள் செய்யும் சாகசங்கள்தான் கதை. இதில் பல ஓட்டைகள் இருக்கலாம். ஆனால் சொல்லப்பட்டிருக்கும் கருத்திற்காக யாவரும் ஒருமுறை படத்தைப் பார்க்கலாம். கதாநாயகிகளில் நித்யாமேனன் தவிர்த்து, காஜல் அகர்வால், சமந்தா இருவரும் பொம்மைகளே. இசை ஏஆர் ரஹ்மான். வடிவேலு, ‘டிஜிட்டல் மணி’ நகைச்சுவைத் தவிர்த்து மற்றவை நினைவில்லை.

சினிமா, அரசியல், மருத்துவம் குறித்த அடிப்படை அறிவு மக்களுக்கு இல்லாததால்தான் நாட்டின் தற்போதைய வாழ்வாதாரப் பிரச்னைகளை மறந்து, திரை நாயகர்களை தங்கள் வாழ்வின் நாயகர்களாக எண்ணும் மூடத்தனம் மேலோங்கி இருக்கிறது. நாயகர்கள் வாழ்வில் வசதியுடன் நன்றாகத்தான் இருப்பார்கள். மக்கள்தான் ‘தலைவா, தளபதி’ என்று தரம்தாழ்ந்து போகிறார்கள். இதை மாற்றவும் இன்னொரு திரைக்களம் வேண்டுமோ? இல்லை, உண்மையான அரசியல் தலைவர் வேண்டுமோ? என்பது காலத்தின் கையில்.

– கா.அருள்