பாரத ஸ்டேட் வங்கி, 10% பணியாளர்களைக் குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் ரஜ்னிஷ் குமார், பாரத ஸ்டேட் வங்கியில் தற்போது 2 லட்சத்து 7 ஆயிரம் பணியாளர்கள் உள்ளதாகவும், பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்கள் 70 ஆயிரம் பேர் ஏப்ரல் 1ம் தேதி முதல் பாரத ஸ்டேட் வங்கியில் இணைய உள்ளதாகவும்  கூறினார்.

இதன் காரணமாக, பணியாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரமாக உயரும் என்பதால், 10 சதவீதம் அளவுக்கு பணியாளர்களைக் குறைக்க வங்கி திட்டமிட்டுள்ளதாக ரஜ்னிஷ் குமார் தெரிவித்தார்.

எனினும், கட்டாய பணி நீக்கம் இருக்காது என்றும், விருப்ப பணி ஓய்வு பெறுவதற்கான சலுகைகள் விரைவில் அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பணியாளர்கள் குறைக்கப்படுவார்கள் என்றும் ரஜ்னிஷ் குமார் குறிப்பிட்டார்.