தமிழனுக்காக யாரும் போராடறது இல்ல

‘ராஜா ராணி’ படத்தில் தனது வித்தியாசமான சிரிப்பால் துணை நடிகராக தமிழ் மக்களை ஈர்த்து, ‘பீட்சா, த்ரிஷா இல்லைனா நயன்தாரா, ஜிகர்தண்டா’ படங்கள் மற்றும் கபாலி ‘நெருப்புடா’ பாடல் மற்றும் பைரவா படத்தின் ‘வரலாம் வரலாம் வா’ போன்ற பாடல்களை எழுதி, பாடிய, தற்போது பெண்கள் கிரிக்கெட்டை கதைக்களமாகக் கொண்டு படம் இயக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் அருண்ராஜ காமராஜ் நம்முடன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்…

‘‘என் பள்ளிப் பருவத்தில் சினிமா மீது எந்த ஒரு ஈர்ப்பும் இருந்ததில்லை. ஆனால் பிடித்த படங்கள் பார்ப்பது அதிகம். ஸ்கூல், டியூசன், வீடுன்னு இருப்பேன். கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். வகுப்புகளுக்கு செல்லாவிட்டாலும் மாலையில் கிரிக்கெட் நெட் பிராக்டீஸ்க்கு கண்டிப்பாக போவேன். கல்லூரி கலை விழாக்களில் அடிக்கடி கலந்துக்குவேன். அப்பொழுதுதான் இயக்குநர் ஆகும் எண்ணம் மனதில் தோன்றியது. அதற்கான முதல் படி குறித்து யோசித்தபோது எனக்குள்ளே பல கேள்விகள். பின்னர் பல இடங்களில் வாய்ப்பு கேட்டேன். ‘நாளைய இயக்குநர்’ போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டேன்.

என் வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்ட காலம் அது. கையில் 50 ரூபாய்கூட இல்லாமல் இருந்திருக்கிறேன். அதற்கு பிறகு பாடல் எழுதி நாமே பாடலாம் என்று முடிவு எடுத்து பொழுது, எனது சீனியர் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களிடம் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு பக்கம் இருக்க, என் கல்லூரி நண்பர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து சில படங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

அப்பொழுதுதான் எனக்கு கபாலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ‘நெருப்புடா’ பாடல். அந்த பாடல் சூப்பர் ஸ்டாருக்கு பண்ணனும்னு பெருசா நாங்க பிளான் பண்ணல. ஆனால் எங்களால் முடிந்த அளவு அந்த பாடலுக்காக உழைக்க ஆரம்பித்தோம். அதற்கு மிகப்பெரிய பாராட்டு எங்க எல்லோருக்கும் கிடைத்தது. முக்கியமா சூப்பர் ஸ்டாரின் பாராட்டு மறக்க முடியாதது. அதற்கு அப்புறம் தொடர்ந்து பல படங்கள் செய்தேன். விஜய்சார்கூட ‘பைரவா’ படத்தில் ‘வரலா வரலாம் வா’ பாடல் செய்தேன். எல்லோரும் ரொம்பவே பாரட்டினாங்க.

மக்கள் பெரிய பட்ஜெட் படங்களுக்குக் கொடுக்கிற ஆதரவை சிறிய பட்ஜெட் படங்களுக்கும் கொடுக்க வேண்டும். ரேங்க் எடுக்கிறவன் புத்திசாலி. ரேங்க் எடுக்காதவன் முட்டாள்ன்னு நாம நெனச்சுட்டு இருக்கோம். அது மாற வேண்டும். குழந்தைகளுக்கு நேர்மை, மனிதாபிமானம் ஆகியவற்றை சிறு வயதிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும்.

சினிமா டிக்கெட் விலை உயர்ந்ததுக்கு ந¤றைய பேசுகிறோம். ஆனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதை நினைத்துக்கூட பார்ப்பது இல்லை. ஒரு உதாரணம், இப்போ இணைய சேவைக்கு ஒரு ஜிபி இலவசமாகப் பயன்படுத்துறோம். நாம் அதை பழகிய பிறகு இலவசம் இல்லைன்னு கொண்டு வருவான். அப்போ நாம என்ன பண்ணுவோம், நம்ம பழக்கத்தை மாத்தாம காசு செலவு பண்ணுவோம். இப்படித்தான் நம்மை மாற்றி வைத்திருக்கிறது இந்த சமூகம். இது மாறுமா? கண்டிப்பா மாறாது.

தமிழனுக்காக இங்க யாரும் போராடறது இல்லை. எல்லாருக்கும் மனசுல ஒரு பயம் இருக்கு. அது மாறணும். நமக¢கான நல்லதை மட்டும் நாம் பார்க்கக்கூடாது. சுத்தி இருக்கிறவங்க எல்லோரும் நல்லா இருக்கணும்னு நினைக்கணும். யாருக்கும் தொந்தரவு தராத வாழ்க்கை வாழ பழகுங்கள். அடுத்து நான் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி படம் இயக்கம் பணியில் இருக்கிறேன். அதற்கும் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.

– பாண்டிய ராஜ்