கே.எம்.சி.எச். மருத்துவமனையில் 8 வயதுள்ள சிறுவனுக்கு ரோபோட்டிக் முறையில் சிகிச்சை!

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் எட்டு வயது சிறுவனுக்கு, சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள அடைப்பை  ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மூலம் சீரமைக்கப்பட்டது.

இந்த சிறுவனுக்கு சிறுநீரகத்திலிருந்து சிறுநீரகப்பைக்கு செல்லும் குழாயில் பிறப்பிலேயே அடைப்பு எற்பட்டு இருந்தது. இது கிட்னியின் செயலை பாதித்துக்கொண்டிருந்தது. சிறுநீரக பைக்கு அருகில் உள்ள இந்த அடைப்பை நீக்க டாக்டர் நாக.குமரன் மற்றும் மயக்கவியல் டாக்டர் என். வினோத்குமார் இருவரும் இணைந்து  ரோபோட்டிக் முறையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

இந்த அறுவை சிகிச்சையில், சிறுநீர் குழாயில் உள்ள அடைப்பை நீக்கிய பிறகு, மீண்டும் சீறுநீர் பையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதோடு, சிறுநீர் பை நிறைந்தவுடன் பின்னோக்கி செல்லாத வகையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு,  நுண்ணிய தையல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நுண்ணிய தையலை மேற்கொள்ள, பல மடங்கு பெரிதுபடுத்திக் காட்டும் ரோபோட்டிக் நுண்ணோக்கியால் மிகவும் துல்லியமாக இந்த அறுவை சிகிச்சையில்  மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சையால், விரைவாக குணமடைவதுடன், துளையிட்டு மேற்கொள்ளப்படும் லேப்ராஸ்கோபிக் சிகிச்சையின் நன்மைகளும்  பெறப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில், குழந்தைக்கான ரோபோட்டிக் முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். விரைவில் குணமடைந்த சிறுவனின் குடும்பத்தினர், கேஎம்சிஎச் நிறுவனத்திற்கு   நன்றியை  தெரிவித்தனர்..

சிகிச்சையை குறித்து கேஎம்சிஎச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி அவர்கள்  கூறுகையில், ‘‘மிகவும் அதிநவீன டா வின்சி ரோபோட்டிக் அறுவை  சிகிச்சை கருவியும், தேர்ந்த மருத்துவர்களும் இம்மருத்துவமனையில் இருப்பதால், இத்தகைய அறுவை சிகிச்சைகளை எளிதாக செய்ய முடிகிறது. இத்தகைய பயனுள்ள கருவி, பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் குறிப்பிட்ட சில அறுவை சிகிச்சைகளுக்கு  மிகவும் உதவியாக உள்ளது என்றும் கூறினார்.