பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.இவ்விழாவிற்கு இந்திய பொது சுகாதார அமைப்பின் தலைவரும், எய்ம்ஸ் மருத்துவமனையின் இருதய நலப்பிரிவின் முன்னாள் துறை தலைவருமான டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பி.எஸ்.ஜி நிறுவனங்களின் அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

இப்பட்டமளிப்பு விழாவில் 174 மருத்துவ பட்டதாரிகள் மற்றும் 69 மருத்துவ பட்ட மேற்படிப்பு பட்டதாரிகளுக்கு மருத்துவ பயிற்சி முழுமையைப் பெற்றதிற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இவற்றைத் தவிர தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் தேர்வுகளில் பல்வேறு பாடங்களில் முதல் மதிப்பெண் பெற்று தேர்வு பெற்ற 24 மாணவர்களுக்கு தங்க பதக்கமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில், பல்கலைக்கழக தேர்வுகளில் அனைத்து மருத்துவ பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அபிநயாவுக்கு மிகச் சிறந்த பட்டதாரி விருதும் ஜி.வி நினைவு தங்கப் பதக்கமும் பரிசாக வழங்கப்பட்டது. மருத்துவ பாடங்களில் நல்ல மதிப்பெண் பெற்றதுடன் கலை, விளையாட்டு, ஆராய்ச்சி முதலான அனைத்து துறைகளிலும்  “சிறந்த ஆல் ரெளண்டராக” தேர்வு பெற்ற மின்மினி செல்வத்திற்கு ஜி.ஆர்.ஜி நினைவு தங்க பதக்கம் வழங்கப்பட்டது.