‘நான் போன் பூத் நடத்தினேன்…’

சினிமாவில் நாயகன், நாயகி இருவரும் எந்த மாதிரியான கதாபாத்திரங்களை ஏற்று நமக்கு சுவாரசியத்தைக் கொடுக்க போகிறார்கள் என எதிர்பார்த்திருக்கும்  வேளையில், எதிர்பாராத கதாபாத்திரம், நம்மை மிகவும் ஈர்த்து விடும். சில காட்சிகளில் வந்தாலும் மனதில் ஒரு தனி இடம் பிடிக்கும் அளவுக்கு நடித்த நடிகர்களில் மிகவும் முக்கியமான நபர் ஜப்பானில் எஸ்டிடி பூத் நடத்தியவர், ‘உன்னை நினைத்து’, ‘போராளி’ போன்ற படங்களில் நடித்த திலீபன், நம்மிடம் உரையாடிய சில சுவாரசியமான தகவல்கள்:

நானும் கோவையில் பிறந்து வளர்ந்தவன்தான். பள்ளிப் படிப்பை கேகே நாயுடு பள்ளியில் முடித்துவிட்டு, சிஐடியில் டிப்ளோமா படித்தேன். பள்ளிக் காலங்களில் இருந்து எனக்கு சினிமா மீது ஆர்வம் அதிகம். இறவு தூங்கும்போதுகூட தமிழ்ப் படங்களின் கதைக்களம் குறித்தும், மக்களுக்குப் பிடிக்கும் கதைகள் குறித்தும் நம்மால் சொல்ல முடியும் என்ற சிந்தனையும் அதுகுறித்த நம்பிக்கையும் எனக்குள் இருந்தது. பிறகு சினிமா எப்படி எடுக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள, பொள்ளாச்சியில் நடக்கும் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகளுக்கு செல்வேன். அங்கு சென்றபோது காட்சிகளை எப¢படி எடுக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்கும் திறன் எனக்குள் வர தொடங்கியது. அதையடுத்து எப்படியும் நாம் தமிழ் சினிமாவில் இயக்குநர் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

அதையடுத்து சென்னைக்குப் புறப்படும் வேளையில், என் வீட்டில் போக வேண்டாம் என்று தடுத்தார்கள். ஒரு வாரம் சென்னையில் இருந்து வேலை தேடுகிறேன், சினிமாவில் எனக்கு வாயுப்புக் கிடைக்கவில்லை என்றால், ஊருக்கு வந்து விடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு சென்னை வந்தேன். வந்த ஒரு வாரத்தில் இயக்குநர் ஸ்ரீதர் கே விஜயனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து பணிபுரியத் தொடங்கினேன். அதற்கு பிறகு இயக்குநர் விக்ரமன், சமுத்திரகனி சாரிடம் உதவி முதன்மை இயக்குநராக பணிபுரிந்தேன். அப்படியே வாழ்க்கை சென்று கொண்டு இருக்கும்போது, இயக்குநர் சுசீந்திரன் சார் என்னை அவர் படங்களில் உதவி இயக்குநராக சேர்த்துக் கொண்டார். அவர்தான் எனக்கு ‘திலீபன்’ என்று பெயர் வைத்து எனக்கென்று ஒரு அங்கீகாரம் கொடுத்தார்.

சமுத்திரக்கனி அவர்கள் தான் எடுக்கும் படத்தில் சில கதாபாத்திரங்களில் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அதில் எனக்கு பெயரும் புகழும் கிடைத்தது. அந்த சந்தோசம் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. போராளி படம் என்னால் மறக்க முடியாத அனுபவம். சமுத்திரக்கனி அவர்கள் ஒரு நாள் என்னை அழைத்து, ஒரு குடிகாரன் கதாபாத்திரம், அதை நீதான் பண்ண வேண்டும் என்று சொன்னார். நானும் என்னால் முடிஞ்ச அளவுக்கு அதில் என் உழைப்பைப் போட்டேன். படம் வெளியானதும் எனக்கு ந¤றைய பேர் போன் செய்து  பாராட்டினர். அதற்கு பிறகுதான் நானே திரையரங்கத்திற்குச் சென்று போராளி படத்தைப் பார்த்தேன்.

திரையரங்கில் நான் பேசும் வசனங்களைக் கேட்டு மக்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தபோது, சமுத்தரகனிக்கு கோடி நன்றிகள் சொன்னாலும் போதாதது என்று தோன்றியது. ப¤றகு அவரது ஒவ்வொரு படங்களிலும் என் மீதான அன்பின் காரணமாக எனக்கென்று ஒரு தனி இடம் வைத்து இருப்பார். அதைப்போல் சுசீந்திரன் அவர்களும் என் மீது அதிக பாசம் காட்டக்கூடியவர். என் வளர்ச்சி மீது ரொம்ப அக்கறை செலுத்துபவர்களும் இவர்கள்தான்.

எப்போதும் என் மனதை ஒரு நிலைப்படுத்தக்கூடிய விஷயம் ஒன்று, அது புத்தகங்கள்தான். தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கும் அத்துணை இளம் சமுதாயத்தினரும் கண்டிப்பாக புத்தகங்கள் மீது காதல் வைத்திருக்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.

சினிமா ஒவ்வொரு நாளும் வேறுவேறு கோணத்தில் மாறிக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு படத்துக்கும் பல வித்தியாசங்கள், பல சமூக வெளிப்பாடுகள் இருக்கின்றன. அதை நாம் தட்டிக் கொடுத்து பாராட்ட வேண்டும். ஒவ்வொரு திரைப்படமும் ஒரு குழந்தையைப்போல. அதை உருவாக்கும் தாய் ஸ்தானத்தில் இருக்கும் இயக்குநருக்குத்தான் அதன் வலி தெரியும். திருட்டு விசிடி உள்ளிட்ட போராட்டங்களைத் தாண்டி தமிழ் சினிமா ஒரு பெரிய வரலாற்றை எட்டிப் பிடிக்கும் என்பதை சொல்லிக் கொண்டு விடை பெறுகிறேன்.

பாண்டிய ராஜ்