எண் எழுத்து இகழேல்

எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதவை. ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே என்ற ஔவையின் கூற்றுபடி, நம் இளமை காலத்திலேயே கல்வியை திறம்பட கற்க வேண்டும். ஆங்கிலேயர் நம் நாட்டை ஆட்சி செய்த காலத்தில், திட்டமிட்டு நம் தேசத்தின் குருகுலக் கல்வி முறையை அடியோடு ஒழித்தனர். ஆனால், நம் கோவை மக்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 1926ம் ஆண்டு பிஎஸ்ஜி அறநிலை உருவாக்கப்பட்டது. சாதி, மத பேதமின்றி ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி வழங்கிட “சர்வஜன பள்ளி” தோற்றுவிக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி, கிராமப்புற மக்களுக்கு கல்வி கிடைக்காமல் போகக்கூடிய நிலை ஏற்பட்டது. இந்நிலை மாற வேண்டும் என்று நினைத்து தோற்றுவிக்கப்பட்டதுதான் “மாணவர்கள் விடுதி”. இவ்விடுதி, உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் என சகல வசதிகளும் கொண்ட ஒரு இல்லமாகவே அமைந்தது.

இதனை அறிந்த கிராமப்புற மக்கள், தங்கள் குழந்தை பாதுகாப்புடனும், நல்லொழுக்கங்களுடனும், கல்வியை பெற ஒரு சிறந்த நிறுவனம் கிடைத்ததை கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தனர். மாணவர் விடுதியில் இருந்த மாணவர்கள், தங்கள் இல்லம் போல் அனைவரிடமும் சுதந்திரமாக இருக்க பழகினர். ஆசிரியர்களின் கனிவான நடத்தையும், மாணவர்களின் ஒழுக்கப்பண்புகளையும் பார்த்து பின்னாளில் இது “மாணவர் இல்லம்” ஆக மாற்றப்பட்டது. தாய் தந்தை இழந்தோர், மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்த கல்வி கற்க முடியாத மாணவர்கள் என பலரும் இந்த விடுதியில் ஒன்று கூடினர். படிக்கும் நேரத்தில் படிப்பு, விளையாடும் நேரத்தில் விளையாட்டு, ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக்கொள்வது போன்ற நற்குணங்களை பார்த்து பெருமிதம் கொண்ட பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்களும் இவர்களுக்கு உதவ ஆரம்பித்தனர். ஆம். “நாமெல்லாம் ஒரு தாய் மக்கள்” என்பது போல, ஒவ்வொரு மாணவர்களுடன் அக்கறையுடன் பழகுவது, மாலை வேளையில் அவர்களுக்கு பயிற்சி வகுப்பு (டியூசன்) எடுப்பது, பண்டிகை காலங்களில் அவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவது என மெய் சிலிர்க்க வைக்கின்றனர்.

இவ்வாறு 1990ல் “மாணவர் இல்லம்” ஆக மாறிய இந்த விடுதி, தற்போது 80 மாணவர்களுடன் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும், இனிப்பு,புத்தாடை, பட்டாசு, அறுசுவை விருந்து என தங்கள் குடும்பமே நினைவிற்கு வராத வண்ணம் இவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகின்றனர். ஒரு மனிதனுக்கு மாதா,பிதா,குருவிற்கு பிறகுதான் தெய்வம் என்பார்கள். ஆனால் இந்த மாணவர் இல்லத்தில் தங்கி படிக்கும் மாணவர்கள், பிஎஸ்ஜி கல்வி குழுமத்தை தங்கள் தெய்வமாய், தாய்மடியாய் கருதுகிறார்கள். மாணவர்கள் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதில், இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், வெற்றிக் கனியை எட்டிப் பறிக்கிறது. காலங்கள் மாற மாற அறங்காவலர்களும், ஆசிரியர்களும் மாறுகிறார்களே தவிர, அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற இவர்களின் கொள்கை மட்டும் இன்றவும் மாறவில்லை.