கிராமங்களை மீட்க வேண்டும்

கிராமியப்  படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர், தமிழ் சினிமாவின் மறக்க முடியாத யதார்த்தமான சினிமா இயக்குநர் என அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. இவரது படங்கள் கிராமத்தினுடைய இயற்கையையும், அம்மண்ணின் பாரம்பரியத்தையும், அந்த மக்களின் வாழ்வியலையும் அழகாக எடுத்துரைக்கும். தமிழ் சினிமாவின் வாரிசு நடிகர்கள் பட்டியலில் பாரதிராஜாவின் மகனும் ஒருவர். அவர்தான் மனோஜ். அவர் தனது வாழ்க்கை அனுபவங்களைத் தன்னுடன் நமக்காக இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

‘கோவை மெயில்’ மூலமாக தமிழக மக்கள்கிட்ட என்னோட வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் சந்தோசம். நான் எப்பவும் ரொம்ப வாலு. எல்லாத்துக்கும் பிடிவாதம் பிடிப்பேன். பிடிச்ச விஷயத்தை பண்ணி முடிக்கணும்னு ரொம்ப ஆர்வமா இருப்பேன். ரஜினி சார் நடிச்ச கொடி பறக்குது படம் ப்ரீமியர் ஷோ பார்த்துட்டு வந்த அடுத்த நாள் தீபாவளி, நடு ராத்திரி ஒரு மணி இருக்கும். எங்க வீட்டுத் தெருவுல நான்தான் முதல்ல பட்டாசு வெடிக்கணும்னு வெடிச்சு, நடு ராத்திரில எல்லாத்தையும் எழுப்பிவிட்டு ஒரு பெரிய ரகளை விளையாட்டு விளையாடி இருக்கேன். அது எனக்கு மறக்க முடியாத தீபாவளி.

அதுக்கு அப்புறம் என் வாழ்க்கை பத்தி யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். சரி, நம்ம அப்பா மாதிரி ஒரு பெரிய இயக்குநர் ஆகணும்னு முடிவு பண்ணி, ஸ்கூலுக்கு போறத ஸ்டாப் பண்ணிட்டேன். எங்க வீட்டுல எங்க அப்பா ஒரு ருத்ர தாண்டவமே ஆடினார். அப்புறம் சரி உனக்கு இயக்குநர் ஆகணுமா? எங்கிட்ட இருந்தா நீ தொழில் கத்துக்க மாட்ட. வேற ஒரு இயக்குநர் கிட்ட நீ போய் தொழில் கத்துக்கன்னு சொன்னார். உன்னோட சுய முயற்சியில் முன்னேறனும்னு சொன்னார். நானும் சரின்னு சொல்லியிட்டு, இயக்குநர் மணிரத்னம் கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்தேன். நான் அவர்கூட ஒர்க் பண்ண படம் பம்பாய்.

அதுக்கு அப்புறம் அப்பாகிட்ட தமிழ்செல்வன் படம் வரைக்கும் ஒர்க் பண்ணி முடிச்சேன். ஒருநாள் அப்பா எங்கிட்ட, நீ நடிகனாகிவிடு என்று கூறினார். எனக்கு ஒரே ஷாக். முதல்ல நான் முடியாதுன்னு சொன்னேன். அதுக்கு அப்புறம் அப்பா என்ன ஒதுக்க வச்சார். என்னோட முதல் படம் என் குருநாதர் மணிரத்னம் சார் ஸ்கிரிப்ட் எழுதி, அப்பா இயக்கத்தில், அங்கிள் வைரமுத்து பாடல் எழுதி, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் நான் ஹீரோவா நடித்த படம் தான் ‘தாஜ்மஹால்’. யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. அதுல ரஹ்மான் சார் இசையில ‘ஈச்சி எழுமிச்சி… ஏன்டி கருவாச்சி’ என்ற பாடலை நான் பாடியிருந்தேன்.

அந்தப்படம் எனக்கு ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக் கற்றுக்கொடுத்தது. ஆனால் அப்போ இருந்த தமிழ் சினிமா இப்போ இல்லை. எல்லாமே டிஜிட்டல் உலகமா மாறிடிச்சு. எல்லோரும் தன்னோட கற்பனை கதைகளைப் படமாக்கணும்னு இருக்கிறார்கள். அது ஒரு வகையில் நல்ல விஷயம்தான். இப்போ இருக்கிற காலகட்டத்துல, ஒரு படம் வெளியாவதற்கு முன்பே 4 டீசர் 5 டீசர் விடுறாங்க. அதனால் படம் பார்க்கும் சுவாரசியம் குறைந்துபோய் விடுகிறது. இதனால்கூட சில படங்கள் நாம் நினைக்கும் அளவிற்கு வசூலைத் தருவதில்லை. இது ஒரு பக்கம் இருக்க, சமூக வலைத்தளங்களில் படம் பார்த்துவிட்டு, தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்கிறார்கள்.

தமிழ் சினிமாவுக்குன்னு சில பொறுப்புகள் உள்ளன. நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டை யும் பிரதிபலிக்கும் விதத்தில் தமிழ் படங்கள் அமைய வேண்டும். மண் சார்ந்த கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தற்போது நாம் எல்லோரும் நமது கிராமங்களை மறந்து இருக்கின்றோம்.

அழிந்து கொண்டு வரும் கிராமங்களை மீட்டெடுக்க வேண்டும். முக்கியமாக நம் கலாச்சாரத்தை ஆழமாகக் கொண்டு வரும் படங்களை ஆதரிக்க வேண்டும். அதனால் பல நன்மைகள் ஏற்படும் என்பது என் கருத்து. முகநூல் பக்கத்தில் நம் கருத்தைச் சொல்லிவிட்டு ஒதுங்குவதைவிட, நம் குரலை உயர்த்தி நம் உரிமையை சொல்ல வேண்டும். கிராமங்கள் அழிந்துபோகும் சூழல் இனிமேல் வரவிடக் கூடாது.

சந்தோசம் என்பது நம் குடும்பத்தை சந்தோசமாக வைத்துக் கொள்வதில்தான்  இருக்கின்றது என்பார் எங்க அப்பா. இந்த வருஷம் கண்டிப்பா பல தம்பதிகள் தல தீபாவளி கொண்டாடுவங்க. என்னோட தல தீபாவளியையும் என்னால் மறக்க முடியாது. அற்புதமான அனுபவம். மிக விரைவில் உங்களுக்குப் பிடித்த இயக்குநரா உங்க முன்னாடி வந்து நிற்பேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். நன்றி.

– பாண்டியராஜ்