வாழ்க்கையில் வாழ்தலைத் தாண்டி வேறொரு நோக்கம் இருக்கிறதா?

சத்குரு:

வாழ்வில் உங்களை வந்து சேர்வது எதுவாக இருந்தாலும் சரி, மிகவும் உயர்ந்த நிலையிலான கருணையே உங்களை வந்தடைந்தாலும், “இங்கேதானே இருக்கிறது!” என அலட்சியமாக இருந்தால், உங்கள் அனுபவத்தில் அது மெல்ல பலவீனமடைவதோடு காலப்போக்கில் காணாமலும் போகக்கூடும்.

இது மனிதர்களுக்கு, அவர்கள் பிறந்ததிலிருந்தே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்வையோ உங்களைச் சுற்றியிருப்பவர்கள் வாழ்வையோ நன்றாக கவனியுங்கள். எவ்வளவு பேர், வாழ்க்கை அவர்களுக்கு அளிக்கும் அற்புதங்களை முழுமையாக உணர்ந்து வாழ்கிறார்கள்?

தங்களைச் சுற்றி இருக்கும் அழகான அம்சங்களை எவ்வளவு பேர் அனுபவத்தில் காண்கிறார்கள்? சுவாசிக்கும் காற்று, பருகும் நீர், உண்ணும் உணவு ஆகியவற்றை எவ்வளவு பேர் உண்மையிலேயே ரசிக்கிறார்கள்? வாழ்வைத் தவிர வேறோர் இலட்சியம் இருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள்?

வாழ்தலையும் தாண்டி வேறொரு நோக்கம் இருப்பதாக எண்ணுபவர்கள் கடவுளின் வேலையை கையில் எடுத்திருப்பதாகக் கருதிக்கொள்பவர்கள். அவர்கள் இந்த உலகை எதிர்த்து போரிடுகிறார்கள். அவர்களால் மிகக் கொடூரமான விஷயங்களை செய்ய முடியும். ஏனென்றால், வாழ்வை விடவும் முக்கியமான அம்சங்கள் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.

தீவிரவாதிகளின் தாக்குதல்கள் எல்லாம் இத்தகைய எண்ணங்களின் வெளிப்பாடுகள்தான். ஆனால், தீவிரவாதிகள் மட்டுமல்ல, மனிதர்கள் பொதுவாகவே ஏதோ ஒருவிதத்தில் இதைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். பிற உயிர்களுக்கு அவர்கள் தீமை விளைவிக்காமல் இருக்கலாம். ஆனால், தங்களுக்குத் தாங்களே அவர்கள் தீமை விளைவித்துக் கொள்கிறார்கள்.

வாழ்வைக் காட்டிலும் வேறேதோ பெரிதாக இருக்கிறது என்று கருதுபவர்களுக்கு, வாழ்க்கை வலி மிகுந்ததாகவும், கொடூரமானதாகவும் இருக்கும். இதற்குக் காரணம், அவர்களை யாரோ துன்புறுத்துகிறார்கள் என்றில்லை. அவர்கள் தங்களுக்குத் தாங்களே அத்தகைய துன்பத்தை விளைவிக்கிறார்கள்.

எனவே, உயிருடனிருப்பது மட்டும் முக்கியமில்லை. உயிர்ப்புடன் இருப்பது முக்கியம். உங்களைச் சுற்றியிருக்கும் அத்தனை அம்சங்களுடன் ஒத்திசைவுடன் இருப்பதுதான் உங்கள் வேலை. அப்படி இருந்தால், இந்த பூமியின் அற்புதம், வானத்தின் பிரம்மாண்டம், அதனைக் கடந்து நிற்கும் அம்சங்கள் என எல்லாவற்றையுமே உங்களால் உணர முடியும்.

வாழ்தலை விடவும் பெரிதாக ஏதோ இருப்பதாய் நினைத்துக்கொண்டு வாழ்வை அலட்சியம் செய்தால் மருத்துவ அளவுகோல்படி நீங்கள் உயிருடன் இருப்பீர்கள். ஆனால், உங்களைச் சுற்றியிருக்கும் மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை இறந்தவராகவே இருப்பீர்கள்.

எனவே, வாழும்போதே இறந்தவர்கள் மீண்டும் வாழ்வுக்குத் திரும்புவது நல்லது. எப்படியும் மரணம் வரத்தான் போகிறது. ஏன் அவசரப்பட வேண்டும்?