மாநகராட்சியில் நடைபெற்று வரும் சிறப்பு தூய்மைப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு

மத்திய அரசு இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவை 25.03.2020 முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழக அரசு சில தளர்வுகளுடன் ஊரடங்கை தமிழகம் முழுவதும் அமல்படுத்தி இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது.

தமிழக முதல்வர் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக காணொளி காட்சி மூலம் பொதுமக்களுக்கு அவ்வப்போது பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருகின்றார். கோவையில் கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று (14.08.2020) கோவை மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு மண்டலம், கோகுலம் காலனி, 2வீதி, பி.என்.புதூர் ஆர்.ஜி.ஆர் வீதி, மும்மநாயக்கர் வீதி, நேதாஜி ரோடு, எஸ்.என்.பாளையம் ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அப்பகுதியில் சிறப்பு தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்களிடம் தினமும் காலை மற்றும் மாலை ஆகிய வேலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படவேண்டுமெனவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான பால், காய்கறி, மளிகைப்பொருட்கள் கிடைப்பதற்கு உரிய வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டுமென சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
பின்னர், அப்பகுதி பொதுமக்களிடம் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதையும், சளி, காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டுமென தெரிவித்த ஆணையாளர் அப்பகுதி மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்காக வழங்கப்பட்ட வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடவேண்டுமெனவும் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மேற்கு மண்டலம், லட்சுமி நகர் எஸ்.என்.பாளையம் பகுதியில் சாக்கடை கழிவு நீர் கால்வாயில் தேங்காமல் சீராக செல்வதற்கான சிறப்பு தூய்மைப் பணிகள் நடைபெற்றுவருவதை பார்வையிட்ட பின்னர், அப்பகுதியிலுள்ள சாலையோர வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி திட்டத்தின் மூலம் பதிவு பெற்றுள்ள சாலையோர வியாபாரிகள் ரூ.10 ஆயிரம் வரை வங்கிக்கடன் பெற மாநகராட்சி மண்டலங்களில் செயல்படும் சிறப்பு முகாம்களுக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தெரிவிக்குமாறும் தொடர்புடைய அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

இவ்வாய்வின்போது மேற்கு மண்டல உதவி ஆணையர் ஏ.ஜே.செந்தில்அரசன், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் முருகன், பணிமேற்பார்வையாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.