நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகம் மற்றும், புதுச்சேரியில் அனைத்து நீதிமன்றங்களையும் திறக்க வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா கால ஊரடங்கால் நாடு முழுவதும் அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதில் நீதிமன்றங்களின் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதால் வழக்கறிஞர்கள் தொடர்ந்து நீதிமன்றங்களை திறக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின்  தலைவர் சத்தியசீலன் தலைமையில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயில் முன்பாக வழக்கறிஞர்கள் கையில் கருப்புக்கொடி ஏந்தி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நீதிமன்றங்களை மீண்டும் திறக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கோசங்கள் எழுப்பினர்.

பின்னர் சத்தியசீலன் பேசுகையில், “கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமூக இடைவெளியைப் பின்பற்றி அனைத்து தனியார் நிறுவனங்களும் செயல்படுகின்றன.

அதன்படி சமூக இடைவெளியை பின்பற்றி நீதிமன்றங்களை நடத்த வேண்டும். நலிவடைந்த வழக்கறிஞர்களுக்கு நிவாரண உதவி, எந்த நிபந்தனையும் இல்லாமல் ரூ.5 லட்சம் வங்கி கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.