கோவையில் புதிய உச்சம் தொட்ட கொரோனா தொற்று எண்ணிக்கை

கோவை சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றே இல்லாத பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட பொழுது கோவை மக்கள் பலர் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால் தற்பொழுது நிலை தலைகீழாக மாறி இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 324 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன் கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரு நாளில் 313 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோவை அரசு மருத்துவமனை 23 வயது பெண் அரசு மருத்துவர், 22 வயது பெண் முதுநிலை மருத்துவ மாணவி ஆகியோருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர பி.ஆர்.எஸ். குடியிருப்பை சேர்ந்த 19, 45 வயது பெண் காவலர்கள், 33 வயது ஆண் காவலர் ஆகியோருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், குனியமுத்தூரில் 18 பேர், கணபதியில் 13 பேர், செல்வபுரத்தில் 12 பேர், ரத்தினபுரியில் 11 பேர், உக்கடம், காந்திபுரம், பி.என்.பாளையத்தில் தலா 9 பேர், பீளமேட்டில் 8 பேர் உள்பட 324 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 296 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி கோவையில் நேற்று 8 பேர் உயிரிழந்தனர். இதுவரை கோவையில் பலியானவர்கள் எண்ணிக்கை 140ஆக அதிகரித்துள்ளது.