மணிக்கட்டு மூலம் உடல் வெப்பநிலை கண்டறியும் ரோபோ

கோவை கோல்டுவின்ஸ் பகுதியை சேர்ந்த பேல்கன் ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனம் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் உடல் வெப்பநிலை அறிந்து கொள்ளும் ரோபோ இயந்திரத்தை வடிவமைத்து உள்ளது.

இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. அந்நிறுவனத்தின் தலைவர் லோகநாதன் இதுகுறித்து தெரிவிக்கையில் தற்போது கொரோனா தொற்று காரணமாக உடல் வெப்பநிலை கண்டறிய தெர்மாமீட்டர் மூலம் சோதனைகள் செய்யப்படுகிறது. இதில் பல்வேறு சிரமங்கள் உள்ள நிலையில்

இதற்கு மாற்றாக அரசு வழங்கி உள்ள ஆதார், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து ரோபோ இயந்திரத்தின் மூலம் எளிமையாக கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தனியார் நிறுவனங்கள் வழங்கிய உள்ள மின்னணு அடையாள அட்டையைக் காண்பித்த பின்னர் மணிக்கட்டைக் காண்பித்தால் உடலின் வெப்பநிலையை இயந்திரம் காண்பிக்கும் வகையிலும் பின்னர் ஆட்டோ சேனிடைசிங் செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். ஒரு நிமிடத்தில் 30 பேர் வரை வெப்ப சோதனை செய்ய முடியும் எனவும் இதில் பெறப்படும் தகவல்களை கிளவுட் ஸ்டோரேஜ் மூலம் சேமித்து வைக்கும் வகையில் வடிவமைத்து உள்ளதாக கூறினார்.

பள்ளிகள்,கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் இதனை எளிதாக பயன்படுத்த முடியும் எனவும் இதை எளிதாக கையாளவும் முடியும் எனவும் தெரிவித்தார். மின்சாரம் இல்லாத நேரங்களில் இதில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி மூலம் சோதனை செய்து கொள்ளலாம் எனவும் தற்போது கொரோனா தொற்று கோவை மாவட்டத்தில் அதிக அளவில் அதிகரித்து வரும் நிலையில் உடல் வெப்பத்தைக் கண்டறிந்து தொற்றை கட்டுப்படுத்த இந்த இயந்திரம் உபயோகமாக இருக்கும் என்றார்.

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் இது உருவாக்கப்பட்டதாகும் மணிக்கட்டு மூலம் வெப்ப நிலை கண்டறியும்  இந்த வகை இயந்திரம் இதுவே முதல் முறை எனவும் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அந்நிறுவனத்தின் விற்பனை மேலாளர் கார்த்திக், முதன்மை மென் பொறியாளர் ஸ்டான்லி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.