உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த  பெண் யானை பலி

கோவையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த  பெண் யானை இன்று (10.8.2020) சிகிச்சை பலனின்றி பலியானது.

கோவை அடுத்து போளுவம்பட்டி அருகே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உடல் மெலிந்து ஒரு பெண் யானை இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் மருத்துவக்குழுவை ஏற்பாடு செய்து யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அந்த யானைக்கு 12 வயது என கணிக்கப்பட்டுள்ளது. இந்த யானைக்கு இதுவரை 53 குளுகோஸ் பாட்டில்களில் யானைக்கு தேவையான ஆண்டிபயாட்டிக் மற்றும் எனர்ஜி மருந்துகள் கொடுக்கப்பட்டன.

ஆனாலும் யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் யானை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. உணவு உட்கொள்ள முடியாமல் உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ள யானைக்கு மருத்துவ குழுவினர் மூன்று நாளாக தீவிர சிகிச்சை அளித்து வருவதாக வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் யானை சிகிச்சை பலனின்றி பலியானது. இது வன ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.