டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன் ரோஜர் ஃபெடரர் பிறந்த தினம்

பெடரர் சுவிட்சர்லாந்தின் பேசல் நகரின் அருகில் உள்ள பென்னிஞ்சேன் ஊரில் சுவிட்சர்லாந்து குடிமக்களாகிய ராபர்ட் பெடரெர் – லிநெட் டு ராண்ட் (தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர்)தம்பதியருக்கு , 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் நாள் மகனாகப் பிறந்தார். பெடரர் சுவிட்சர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையும் பெற்றுள்ளார். அவர் பிரான்சிய-இடாய்ச்சுலாந்திய எல்லைப் பகுதிக்கு அருகிலுள்ள முன்சென்சுட்டைன், பேசலுக்கு அருகிலுள்ளது, புறநகர்ப் பகுதியில் வளர்ந்தார். பெடரர் சுவிசு-இடாய்ச்சு, இடாய்ச்சு, பிரரன்சியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசக் கூடியவர்.

அனைத்து சுவிட்சர்லாந்து ஆண் குடிமக்களைப் போலவே ரோஜர் பெடரரும் சுவிட்சர்லாந்து படைத்துறையில் (இராணுவத்தில்) பணியாற்றினார். ஆயினும் 2003-ஆம் வருடம் அவரது முதுகு வலியின் காரணமாகப் படைப் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

பெடரர், முன்னாள் பெண்கள் டென்னிசுக் கூட்டமைப்பின் ஆட்டக்காரியான மிர்கா வாவ்ரிநெக்கை மணம் முடித்துள்ளார். இவர்களுக்கு மைலா ரோசு, சார்லின் ரிவா எனும் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.

பெடரர் பல்வேறு வித தொண்டூழியப் பணிகளைச் செய்து வருகிறார். அவர் 2003-ஆம் ஆண்டு ரோஜர் பெடரர் அற நிறுவனத்தை அமைத்து பொருளாதாரத்தில் பின்பற்றிய மக்களுக்கும் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாகவும் செயல்பட்டு வருகிறார். 2005-ஆம் வருடம் காத்ரீனா புயலால் பாதிப்படைந்தவர்களுக்கு உதவும் விதமாக அவ்வாண்டு யுஎசு ஓபன் போட்டியில் பயன்படுத்திய மட்டைகளை ஏலம் விட்டார். 2004—ஆம் வருடம் யூனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டார். அதன் பின், அவர் இந்திய பெருங்கடலை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி பாதித்த தமிழ்நாட்டின் பகுதிகளைப் பார்வையிட்டார். மேலும் யூனிசெப்பால் நடத்தப்பட்ட எய்ட்சு விழிப்புணர்வு கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். 2010-ஆம் வருடம் ஃகையிட்டி (Haiti) நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம் அவ்வாண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் பயிற்சி ஆட்டங்களின் கடைசி நாளன்று, ஃகிட் ஃபார் ஃகையிட்டி (Hit For Haiti) எனும் நிகழ்ச்சியை ஏற்படுத்தினார். அதில் அவருடன் உடன் பணியாற்றும் வீரர் வீராங்கனைகளான ரபேல் நடால், நோவக் ஜோகோவிச், ஆண்டி ராடிக், லெயுட்டன் ஹெவிட், கிம் கிளைஸ்டர்ஸ், செரீனா வில்லியம்ஸ் மற்றும் சமந்தா ஸ்டோசர் ஆகியோர் பங்கேற்ற ஆட்டங்கள் நடைபெற்றன. அதன் மூலம் கிடைத்த வருமானம் முழுவதும் ஃகையிட்டி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

டென்னிஸ் நாயகன் எனும் பெருமையைத் தாண்டி, அவர் ஒரு இணையில்லா மனிதர். பியட்ரிஸ் டிநோகோ என்றொரு பதினேழு வயது பெண். கேன்சரால் இறந்து கொண்டிருந்தாள். பெடரரை சந்திக்க வேண்டும் என்பது என் ஆசை என எழுதிப்போட பிறந்தநாள் அன்று பெடரர் அவளை சந்தித்தார். ஒரு ஹாய் சொல்லிவிட்டு போனால் போதும் என்று சொல்லி இருந்தார்கள், பெடரர் வந்தார், உள்ளுக்குள் கண்ணீர் முட்டுகிறது. சிரித்துக்கொண்டே அந்த தேவதையிடம் முழுதாக பதினைந்து நிமிடம் பேசுகிறார். ஒரு அணைப்பு, நெற்றியில் ஒரு முத்தம். பின்னர் அவர் ஆடும் போட்டியைக் காண கூட்டிப்போகிறார். மதிய உணவுக்குக் கூட போகாமல் அவளுக்கு, அவளின் தோழிகளுக்கு கையெழுத்துப் போட்டு தந்து கொண்டே இருக்கிறார். நான்கு ஸ்நாப்கள், எக்கச்சக்க சந்தோசம் என்று அந்த பெண்ணை மகிழ்வித்துவிட்டுத்தான் களத்துக்கு போகிறார்.

டென்னிசு வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவராவார். 19 கிராண்ட் சிலாம் எனப்பெறும் பெருவெற்றித் தொடர்களை வென்றுள்ளதன் மூலம் ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் வீரர்களுள் மிக அதிக கிராண்ட் ஸ்லாம் வென்ற வீரர் என்ற புகழுக்குரியவராவார். மேலும், மொத்தம் 302 வாரங்கள் தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்தவராகவும், தொடர்ச்சியாக 237 வாரங்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றிருந்தமையும் இவரது முக்கிய சாதனைகளுள் ஒன்றாகும். பிப்ரவரி 19 அன்று மீண்டும் முதல் இடம் பிடிக்கும் போது அதிக வயதில் முதல் இடம் பிடித்த வீரர் என அறியப்படுவார்.

இவர் இதுவரை ஒற்றையர் ஆண்கள் பிரிவில் 20 கிராண்ட் சிலாம் (6 ஆஸ்திரேலிய ஓபன், ஒரு பிரெஞ்சு ஓபன், 5 அமெரிக்க ஓபன், 8 விம்பிள்டன்) பட்டங்களை வென்றுள்ளார். இதன் மூலம் 14 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற பீட் சாம்ப்ரசின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ளார். தவிர நான்கு (ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்கா) இடங்களிலும் கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற எட்டு ஆண் வீரர்களுள் ஒருவராவார். 29 முறை கிராண்ட்சிலாம் இறுதிப் போட்டிகளில் ரோஜர் பெடரர் விளையாடியுள்ளது இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையாகும். மேலும் தொடர்ச்சியாக 23 முறை கிராண்ட்சலாம் போட்டிகளின் அரையிறுதியில் விளையாடியதும் இவரது முக்கியச் சாதனைகளுள் ஒன்றாகும். அதாவது 2004 ம் ஆண்டு விம்பிள்டன் போட்டியின் அரையிறுதி முதல் 2010 ம் ஆண்டின் ஆஸ்திரேலிய ஓபன் போட்டி வரை தொடர்ச்சியாக 23 கிராண்ட்சலாம் அரையிறுதிகளில் அவர் விளையாடியுள்ளார். அதேபோல் தொடர்ச்சியாக 10 முறை கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 2005 ம் ஆண்டு விம்பிள்டன் போட்டி முதல் 2008 ம் ஆண்டின் ஆத்திரேலிய ஓப்பன் வரை நடந்த 19 கிராண்ட்சலாம் போட்டிகளில் 18 போட்டிகளின் இறுதியாட்டத்தில் பெடரர் விளையாடியுள்ளார்.

இவ்வரிய செயல்களால் அவரை டென்னிசு உலகின் முடிசூடா மன்னனாக விளங்கச் செய்கின்றன. பெட் எக்ஸ்பிரசு என்றும், சுவிசு மேஸ்ட்ரோ’ என்றும் அவர் புகழப்படுகிறார்.