சித்தா சிகிச்சைக்கு கொடிசியாவில் தனி ஹால் ஒதுக்கீடு

கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா சிகிச்சை அளிப்பதற்காக கொடிசியாவில் தனி ஹால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக 4 ஆயிரத்துக்கும் அதிகமான படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக கொடிசியாவில் மட்டும் 3 ஆயிரத்து 700 படுக்கைகளுடன் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இதில் சித்தா சிகிச்சைகாக மட்டும் தனி ஹால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து மருத்துவர்கள் பேசுகையில், “கொடிசியாவின் இ-ஹாலில் 100 படுக்கைகளுடன் சித்தா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 10 பேர் மட்டுமே வந்த நிலையில் தற்போது 62 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவர்களுக்கு சித்தா மாத்திரைகள், திப்பிலி ரசம், நெல்லி லேகியம், ஆடாதொடை மருந்து, கபசுர குடிநீர் ஆகிய மருந்துகள் அளிக்கப்படுகிறது. இதனுடன் சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது.
2 மருத்துவர்கள் 1 மருந்தாளுனர் அடங்கிய குழு சுழற்சி அடிப்பிடையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இங்கு சிகிச்சைப் பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை கூடி வருகிறது. விருப்பத்தோடு வரும் அனைவருக்கும் சித்தா சிகிச்சை அளிக்கப்படும்” என்றனர்.