பிஎஸ்ஜி கல்லூரியில் ராமன் யாத்ரா

பிஎஸ்ஜி கல்லூரியில், மூன்றாவது இந்திய சர்வதேச அறிவியல் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக ராமன் யாத்ரா துவங்கியது. இந்த சர்வதேச அறிவியல் கொண்டாட்டம், சென்னையில் வருகின்ற அக்டோபர் 13 முதல் 16 வரை நடைபெற உள்ளது. தமிழகத்திலுள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த இரண்டு யாத்ராக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவை கலாம் யாத்ரா மற்றும் ராமன் யாத்ரா.

கலாம் யாத்ரா கடந்த அக்டோபர் 4ம் தேதி தொடங்கியது. இது ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருநெல்வேலி, சிவகாசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர் வழியாக சென்னை வந்தடையும்.

ராமன் யாத்ரா, கோவையில் தொடங்கி, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி வழியாக சென்னை வந்தடையும். இந்த விழாவில் 18 வகையான அறிவியல் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அண்ணா பல்கலைக் கழகம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையம், தேசிய கடல்சார் தொழில் நுட்ப நிறுவனம், சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகம் ஆகிய 5 இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

இந்த யாத்ராவை தொடங்கி வைத்து பேசிய பிஎஸ்ஜி தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் ருத்ரமூர்த்தி, “இந்த விழாவில் எங்கள் கல்லூரி பங்கேற்பதன் மூலம் எங்களது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்விக்கு ஆற்றும் பணி மேலும் வலுவடைந்து தொடர்கிறது” என்றார்.

தமிழ்நாடு அறிவியல் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து யாத்ரா நடத்துவதில் பெருமை அடைகிறோம். இந்த யாத்ராவின் மூலம், தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களை சந்தித்து, அறிவியல் சார்ந்த விபரங்களை பகிர்வதில் பெருமை அடைகிறோம் என்றார்.