கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தேனீ பட்டய படிப்பு

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்ட கூடிய தேனீ வளர்ப்பு குறித்த பட்டய படிப்பினை நடத்திவருகிறது. எண்ணற்ற பணிகள் இருந்தாலும் தேனீ வளர்ப்பு என்பது நிலம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எளிமையான முறையில் அதிக லாபம் ஈட்ட கூடிய தொழிலாக இருந்து வருகிறது. இதனை கல்வியாக கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி கொண்டுள்ளது சிறப்புமிக்கதாக உள்ளது.

இந்தியாவில் விவசாயம் என்பது மிக முக்கிய தொழிலாக மட்டுமல்லாமல் ஒரு சேவையாக இருந்து வருகிறது. இயற்கையை சார்ந்த அனைத்துமே விவசாயம் என்ற முறையில் தனி சிறப்பாக நிலத்தில் எந்த இடமும் பயன்பாடற்று இருக்காது. ஆனால் தென்னை, பாக்கு, மா, வாழை, கரும்பு  உள்ளிட்ட தோப்புகளில் ஊடு பயிர்களை பயிரிட முடியாது.  இருப்பினும், இதற்கு மாற்று வழி உள்ளது.

இயற்கை சார்ந்த அனைத்தும் விவசாயம் என்ற முறையில் இத்தகைய ஊடு பயிர்களை பயிரிட முடியாத நிலங்களில் குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்ட கூடிய தொழிலாக தேனீ வளர்ப்பு உள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் 2 தேனீ பெட்டிகளை வளர்க்கலாம். ஒரு பெட்டி, அதை தாங்கும் ஸ்டான்ட் மூன்று மர பிரேம்கள் என மொத்தம் 2300 ரூபாய்க்குள் இதன் செலவு அடங்கிவிடும். இதனை தோட்டத்தில் வைத்து தான் பராமரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நிலம் இல்லாதவர்கள் தங்கள் வீடுகளிலேயே தேனீக்களை வளர்க்க முடியும்.

ஒரு கிலோ 800 ரூபாய் வரை விற்பனையாகும் தேன், ஐந்து பிரேம்கள் கொண்ட பெட்டியிலிருந்து ஓர் ஆண்டுக்கு 5 கிலோ வரை தேன் எடுக்க முடியும். குறிப்பாக ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை அதிகளவில் தேன் எடுக்க முடியும். இத்தகைய எளிதான குறைந்த செலவில் பராமரிக்கப்படும் தேனீகளை வளர்ப்பதற்கான பட்டய படிப்பை கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஓர் ஆண்டு கால கல்வியாக வழங்கிவருகிறது.

இது மாலை நேர வகுப்புகளாக வாரம் 3 மணி நேரம் நடைபெறும். இதற்கான களப் பயிற்சி வடவள்ளியில் உள்ள பெரிய தோட்டத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்த மேலும் விரிவான தகவல்களுக்கு விலங்கியல் துறை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோவை என்ற முகவரியை அணுகலாம் என பேராசிரியர் ராஜேஷ்குமார் (97152 09467) தெரிவித்தார்.