சிந்துவை ரூ.48.75 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது சென்னை ஸ்மாஷர்ஸ்

பிரிமீயர் பாட்மிண்டன் லீக் ஏலத்தில் பி.வி.சிந்துவை சென்னை ஸ்மாஷர்ஸ் தக்க வைத்தது.

பிரிமீயர் பாட்மிண்டன் லீக் போட்டிகள் வரும் டிசம்பர் 22-ம் தேதி முதல் ஜனவரி 14-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை ஸ்மாஷர்ஸ் உட்பட 9 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தத் தொடருக்கான வீரர், வீராங்கனைகள் ஏலம் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது.

நடப்பு சாம்பியனான சென்னை ஸ்மாஷர்ஸ் அணி ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை தக்கவைத்துக் கொண்டது. கடந்த ஆண்டு ஏலத் தொகையில் இருந்து 10 சதவீதம் கூடுதலாக இம்முறை ரூ.48.75 லட்சத்துக்கு சிந்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

22 வயதான சிந்து சமீபத்தில் கிளாஸ்கோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் கொரியா சூப்பர் சீரிஸ் தொடரிலும் கோப்பை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர், கடந்த ஆண்டு 39 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நெவாலை ரூ.41.25 லட்சத்துக்கு அவாதே வாரியர்ஸ் அணி ஏலம் எடுத்தது. கடந்த ஆண்டும் சாய்னா இதே அணிக்காக விளையாடினார். அப்போது அவருக்கு ரூ.33 லட்சம் வழங்கப்பட்டிருந்தது.

இந்தோனேஷியா, ஆஸ்திரேலிய ஓபனில் அடுத்தடுத்து பட்டம் வென்ற இந்திய வீரர் ஸ்ரீகாந்தையும் அவாதே வாரியர்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது. அவர் ரூ.56.10 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். உலகின் முதல் நிலை வீராங்கனையான தைவானின் டாய் சூ யிங்கை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. முடிவில் அகமதாபாத் அணி அவரை ரூ.52 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் கரோலின் மரின் இம்முறையும் ஹைதராபாத் அணிக்காக விளையாடுகிறார்.

அந்த அணிக்காக அவர். ரூ.50 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். உலக சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்ற டென்மார்க்கின் விக்டர் அக்சல்ஷெனை ரூ.50 லட்சத்துக்கு பெங்களூரு அணியும், 2-ம் நிலை வீரரான தென் கொரியாவின் சன் வான் ஹோவை ரூ.50 லட்சத்துக்கு டெல்லி அணியும் ஏலம் எடுத்தன. உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள சீன தைபே வீரர் சூ வெய் வாங்கை ரூ.52 லட்சத்துக்கு வட கிழக்கு வாரியர்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

ஒலிம்பிக்கில் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற டென்மார்க்கின் கிறிஸ்டினா பெடரெனை ரூ.42 லட்சத்துக்கு அவாதே வாரியர்ஸ் ஏலம் எடுத்துள்ளது. அவரது ஜோடியான கமிலா ரைட்டரை அகமதாபாத் அணி ரூ.35 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. – பிடிஐ