வெளிநாட்டில் உருவாகும் நம் “பாரம்பரிய கட்டில்”

பாரம்பரிய கயிற்றுக்கட்டிலை நாம் மறந்துவிட்டோம். லைஃப்ஸ்டைல் மாற்றத்தில், கயிற்றுக்கட்டிலில் படுப்பதை அசிங்கமாகக்கூட கருதுகிறோம். இதே கயிற்றுக்கட்டிலை, ‘உடல்நலத்துக்கு உகந்தது ‘ என ஆஸ்திரேலியர் ஒருவர் கட்டில் ஒன்றை  ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனைசெய்துவருகிறார். 

சிட்னி நகரைச் சேர்ந்த டேனியர்ல் ப்ளோர், 2010ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்துள்ளார். கடை ஒன்றில் கயிற்றுக்கட்டில் விற்பனைக்கு இருந்ததைப் பார்த்துள்ளார். கடைக்காரரிடம், கயிற்றுக்கட்டில்குறித்தும் அதைப் பின்னுவது குறித்தும் விவரம் கேட்டறிந்தார். சிட்னி திரும்பியதும் முதல் வேலையாக, கயிற்றுக்கட்டிலைப் பின்னும் வேலையை ஆரம்பித்தார் டோனி. பழகப் பழக எதுவும் கைகூடும் என்பதுபோல, டோனி தானே கயிற்றுக்கட்டிலைத் தயாரிக்கப் பழகிக்கொண்டார். 

முதல் கயிற்றுக்கட்டிலை நண்பருக்கு வழங்கினார். நண்பர் கட்டிலைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டு சர்ட்டிஃபிகேட் தர, தொடர்ந்து கயிற்றுக்கட்டில் விற்பனையில் இறங்கினார். இது தொடர்பாக, டோனி இப்போது  வெளியிட்டுள்ள விளம்பரம்தான், இந்தியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. விளம்பரத்தில், ‘இந்தியப் பாரம்பர்யக் கட்டிலின் விலை, 999 ஆஸ்திரேலியன் டாலர்’ எனக் கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.50 ஆயிரம். ‘இந்திய கயிற்றுக்கட்டில் 100 சதவிகிதம் ஆஸ்திரேலியன் மேடு ‘ என்றும் டோனி தன் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வலுவான மரத்தினால் மணிலா கயிற்றைப் பயன்படுத்தி கட்டிலைத் தயாரிப்பதாக, டோனி கூறுகிறார். ஆஸ்திரேலியாவில் கயிற்றுக்கட்டில் விற்பனை சக்கைப்போடு போடுகிறது. டோனி ப்ளோரின் விளம்பரத்தை ட்விட்டரில் பார்த்த இந்தியர்கள் புலம்பி வருகின்றனர். ‘முதலில், கயிற்றுக்கட்டிலுக்கு காப்பிரைட் பெற வேண்டும். இல்லையென்றால், இந்த ஆஸ்திரேலியர் காப்பிரைட் பெற்றுவிடுவார்’ என ட்விட் செய்துள்ளனர்.